காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தான் வரவேற்பதாக, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
காவிரி நதிநீர் தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் 2007-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழகம், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. அந்த வழக்கின் தீர்ப்பை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கினார்.
அதில், 2007-ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்ட 192 டி.எம்.சி. தண்ணீரில் 14 டி.எம்.சி. நீரை குறைத்து 177.25 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அந்த 14 டி.எம்.சி. நீரை கர்நாடகாவுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தீர்ப்பை தான் வரவேற்பதாக கூறினார். இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதனால் பெங்களூரு நகர மக்களின் குடிநீர் பிரச்சனை தீரும் எனவும் அவர் தெரிவித்தார்.
வழக்கறிஞர்களிடம் ஆலோசித்துவிட்டு தனது முழு கருத்தையும் தெரிவிப்பதாக சித்தராமையா கூறினார்.
அதேபோல், இந்த தீர்ப்பை வரவேற்பதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார்.
இதனிடையே, தமிழகத்திற்கு 14 டிஎம்சி தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.