கர்நாடக மாநிலம் ஷிவமோகாவில் உள்ள எம்.வி கல்லூரிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் செவ்வாய்க்கிழமை வருகை தந்ததையடுத்து, அந்த இடத்தைச் சுற்றிலும் பசுவின் கோமியத்தைத் தெளித்து, மாணவர்களில் ஒரு பிரிவினர் அந்த இடத்தை தூய்மைப்படுத்தினர்.
நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்துக் கொண்ட 'தியேட்டர், சினிமா மற்றும் சமூகம் குறித்த உரையாடல்' என்ற தலைப்பில் நடந்த இந்த நிகழ்ச்சி, கல்லூரிக்குள் உள்ள நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது. அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கல்லூரிக்குள் தனியார் நிகழ்ச்சி ஏன் நடத்தப்பட்டது என்று கேள்வி எழுப்பினர்.
இதையும் படியுங்கள்: ’நீங்கள் தேச துரோகிகள், மோடியை பொறுத்தவரை மணிப்பூர் இந்தியாவில் இல்லை’: ராகுல் காந்தி
இந்நிகழ்ச்சிக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கல்லூரி மாணவர்கள் இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகக் கூறினர். போராட்டக்காரர்கள் உள்ளே நுழையாமல் இருக்க கல்லூரிக்கு வெளியே தடுப்புகள் போடப்பட்டதால், அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
போராட்டக்காரர்களில் கல்லூரி மாணவர்களும் வெளியாட்களும் இருந்தனர் என்று ஷிவமோகா காவல் துறை கண்காணிப்பாளர் கூறினார். வெளிநபர்களின் பின்னணி இதுவரை கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிப் படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான பிரகாஷ் ராஜ், மத்திய அரசையும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியையும் (பா.ஜ.க) கடுமையாக விமர்சித்து வருபவர். இந்தநிலையில், அவர் கலந்துக் கொண்ட நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil