Advertisment

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு பின்னால் இருக்கும் தேர்தல் வியூகவாதி; யார் இந்த சுனில் கனுகோலு?

கர்நாடகாவில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்; வெற்றிக்கு உதவிய தேர்தல் வியூகவாதி; சுனில் கனுகோலுவின் பின்னணி

author-image
WebDesk
May 13, 2023 15:35 IST
New Update
karnataka congress

மங்களூருவில் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம் (பி.டி.ஐ)

காங்கிரஸானது கர்நாடகாவில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டியுள்ளது, தேர்தலில் நுண்ணிய நிர்வாகத்தை பெரிதும் நம்பியிருந்த காங்கிரஸ் தேசிய தலைமை, வெற்றியை கணிக்க முடியாத 70 தொகுதிகளை அடையாளம் கண்டு, தொகுதி அளவில் செயலாற்றியது. 2018 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது பா.ஜ.க.,வின் பக்கம் இருந்த சுனில் கனுகோலு தான் காங்கிரஸ் கட்சியின் திட்டங்களை வலுப்படுத்த உதவிய வியூகவாதி.

Advertisment

"கடந்த எட்டு மாதங்களில் நாங்கள் ஐந்து கணக்கெடுப்புகளை செய்துள்ளோம்," என்று ஒரு காங்கிரஸ் தலைவர் கூறினார். மேலும், “இறுதியில் ஒரு சில இடங்களைத் தவிர, வேட்பாளர்கள் முதன்மையாக சுனில் கனுகோலுவின் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்த ஆய்வுகளின் அடிப்படையில், வெற்றியை கணிக்க முடியாத 70 தொகுதிகளைக் கண்டறிந்தோம். அதன்படி, இந்த ஒவ்வொரு தொகுதிக்கும் நாடு முழுவதும் இருந்து வரவழைக்கப்பட்ட AICC (அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி) பார்வையாளர்களை நாங்கள் நியமித்தோம்,” என்றும் அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்: கர்நாடகாவில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ்: வெற்றிக்கு உதவிய 7 முக்கிய விஷயங்கள்

கடந்த மே மாதம், அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் 2024 மக்களவைத் தேர்தல் பணிக்குழுவில் சுனில் கனுகோலுவை உறுப்பினராக நியமித்தார், இதில் ப.சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், கே.சி வேணுகோபால், அஜய் மக்கன், பிரியங்கா காந்தி வதேரா மற்றும் கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்த ரன்தீப் சிங் சுர்ஜேவாலா போன்ற மூத்த தலைவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

சுனில் கனுகோலு காங்கிரஸின் ஒரு பகுதியாக மாறிய சில வாரங்களுக்குப் பிறகு, கட்சியில் சேருவதற்கான வாய்ப்பை பிரசாந்த் கிஷோர் நிராகரித்தார். எந்த ஆன்லைன் பிரசன்னமும் இல்லாத வியூகவாதியான சுனில் கனுகோலு, பிரசாந்த் கிஷோரைப் போலல்லாமல் முற்றிலும் வேறான இமேஜைக் கொண்டவர் மற்றும் அவர்களின் செயல் முறையும் கணிசமாக வேறுபடுகிறது. இருவரும் பிரிவதற்கு முன்பு 2014 இல் ஒன்றாக வேலை செய்தனர்.

பிரசாந்த் கிஷோரிடமிருந்து பிரிந்து, சொந்த முயற்சியில் ஈடுபட்ட பிறகு, சுனில் கனுகோலு 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தி.மு.க தலைவரும் தற்போதைய தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் “நமக்கு நாமே” பிரச்சாரத்தை வடிவமைத்து மீண்டும் தேர்தல் வியூக களத்திற்கு வந்தார். இது வெற்றியடைந்து ஸ்டாலினின் பொது இமேஜை உயர்த்திய போதிலும், மூன்றாவது அணியால் தி.மு.க வெற்றி பெறத் தவறியது, இந்த மூன்றாவது அணி வாக்குகளைப் பிரித்து அ.தி.மு.க ஆட்சியைத் தக்கவைக்க உதவியது. காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியது போல், “தி.மு.க தோற்றது ஆனால் ஸ்டாலின் தலைவராக உருவெடுத்தார்.”

தமிழ்நாட்டில் இருந்ததைத் தொடர்ந்து, சுனில் கனுகோலு டெல்லியில் அமித் ஷாவுடன் பிப்ரவரி 2018 வரை நெருக்கமாகப் பணியாற்றினார். 300 பேர் கொண்ட குழுவின் உதவியுடன் உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் கர்நாடகா மாநிலத் தேர்தல்கள் உட்பட பா.ஜ.க.,வுக்கு வெற்றிகரமான பிரச்சாரங்களை வடிவமைத்தார்.

2019 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, சுனில் கனுகோலு தி.மு.க முகாமுக்குத் திரும்பினார் மற்றும் தமிழகத்தின் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 38 ஐ ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றிபெற உதவினார்.

ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஸ்டாலின் தேர்தல் வியூகவாதி பிரசாந்த் கிஷோரின் உதவியை நாடியதையடுத்து, சுனில் கனுகோலு தி.மு.க.,வில் இருந்து பிரிந்தார். அ.தி.மு.க.,வுக்கு பக்கபலமாக மாறி அறிவுரை கூறினாலும், ஆட்சியில் இருந்து அ.தி.மு.க அப்புறப்படுத்தப்படுவதை தடுக்க முடியவில்லை. அதே ஆண்டு, சோனியா மற்றும் ராகுல் காந்தியுடன் சந்திப்பு நடத்தியதை அடுத்து, சுனில் கனுகோலுவின் நிறுவனமான மைண்ட்ஷேர் அனலிட்டிக்ஸ் சேவையை கர்நாடகாவிற்கு காங்கிரஸ் அமர்த்தியது. சுனில் கனுகோலுவை அறிந்த ஒருவர், "தனது வரம்புகள் அவருக்குத் தெரியும், அவர் ஒருபோதும் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கவோ அல்லது ஆதிக்கம் செய்யவோ முயற்சிப்பதில்லை, அவர் வெற்றிக்கான புகழை ஏற்றுக்கொள்வதுமில்லை அல்லது அவரது தொடர்புகளை வெளிப்படுத்துவதுமில்லை" என்று கூறினார்.

தேர்தல் வியூகவாதியான சுனில் கனுகோலுவை காங்கிரஸ் நியமித்ததற்கான காரணங்களில் ஒன்று, அவர் அதிகம் அறியப்படாத நபர் என்பதுதான். "சமூக ஊடகங்களில் பரவி வரும் அவரது (சுனில் கனுகோலு) புகைப்படம் கூட அவரது சகோதரரின் புகைப்படம்" என்று ஒரு காங்கிரஸ் தலைவர் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். “எனவே, அவருடைய செயல்பாடுகளின் பாணியை நீங்கள் புரிந்து கொள்ளலாம். அவர் பின்னணியில் இருக்க விரும்புகிறார். அவர் தனது கருத்துக்களையும், பார்வைகளையும் கட்சி மீது திணிப்பதில்லை என்பது எனது அபிப்ராயம். ஒவ்வொரு கட்சிக்கும் அதன் பலமும் பலவீனமும் உண்டு. ஒவ்வொரு கட்சியும் செயல்படும் விதம் வித்தியாசமானது. அதை அவர் புரிந்து கொண்டு கட்சியுடன் இணைந்து பணியாற்ற முயற்சிக்கிறார்” என்றும் அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Bjp #Karnataka #Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment