எந்த கட்சியின் திட்டங்கள் முதலில் செயல்படுத்துவது? கர்நாடக கூட்டணி ஆட்சி சந்திக்கும் முதல் பிரச்சனை

புதிய பட்ஜெட்டினை தாக்கல் செய்ய, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் முழு அனுமதியும் எங்களுக்கு இருக்கின்றது

கர்நாடகாவில் புதிதாக ஆட்சி அமைத்திருக்கும் மதசார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் சில முக்கியமான முடிவுகளை செயல்படுத்த தொடங்கியிருக்கின்றார்கள். இந்த ஆட்சியின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் நடைபெற இருக்கின்றது.

தன்னுடைய ஆட்சியின் கீழ் வருகின்ற முதல் பட்ஜெட்டினை தாக்கல் செய்து மக்கள் மத்தியில் நற்பெயர் வாங்கும் முனைப்பில் குமாரசாமி இயங்கி வருகின்றார். ஆனால் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸோ 2013 – 2018 வரை ஆட்சியில் இருந்த போது அவர்கள் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வமுடன் செயல்படுவதாக தகவல் வெளிவந்திருக்கின்றது.

கூட்டணி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கமிட்டியின் தலைவராக இருக்கும் கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் சித்தராம்மைய்யா, காங்கிரஸ் கட்சியின் திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்தி, கட்சியின் பெயரை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றார்.

மதசார்பற்ற ஜனதா தளம் அறிவிக்க இருக்கும் புதிய பட்ஜெட்டினை வேண்டாம் என்று சித்தராம்மைய்யா மறுத்து வருகின்றார். புதிய திட்டங்களுக்கான பட்ஜெட்களுக்குப் பதிலாக இருக்கின்ற திட்டத்தினை விரிவுப்படுத்த என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமோ அதனை தொடருங்கள் என்றும் அறிவுறித்தியிருக்கின்றார், சித்தராம்மைய்யா. இது தொடர்பாக சித்தராம்மைய்யா கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த வீடியோ ஒன்று வெளியாகியிருக்கின்றது. அதில் சித்தராம்மைய்யா “கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் மற்றும் துணை முதலமைச்சர் பரமேஷ்வர் அவர்களை குமாரசாமியின் புதிய பட்ஜெட் தொடர்பாக உதவுகின்றாரா?” என்று கேள்வி எழுப்பியதும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து குமாரசாமி தெரிவிக்கையில் “புதிய பட்ஜெட்டினை தாக்கல் செய்ய, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் முழு அனுமதியும் எங்களுக்கு இருக்கின்றது. மேலும் கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அத்தனை திட்டங்களையும் தொடர்ந்து நிறைவேற்றுவோம்” என்று குறிப்பிட்டார். “இது புதிய கூட்டணி ஆட்சி. ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் புதிதாக பட்ஜெட் தாக்கல் செய்வது நடைமுறையில் இருக்கும் ஒன்று தான்” என்றும் அவர் கூறினார்.

சமீபத்தில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய விரும்புவதாக குமாரசாமி குறிப்பிட, சித்தரம்மைய்யாவோ கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கு பதிலாக வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கலாம் என்று வேறொரு யோசனையைக் கூறியிருக்கின்றார். இதைப் பற்றி பாஜக தலைமையை சந்தித்து திரும்பிய எடியூரப்பா கூறுகையில் “என்ன நடந்தாலும் அமைதியாக, வளர்ச்சித்திட்டங்களை இவ்வரசு கொண்டு வருகின்றதா என்று பார்ப்போம். 2019 பாராளுமன்றத் தேர்தல் வரும் வரை பொறுமை காப்பது நலம்” என்று தெரிவித்திருக்கின்றார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close