கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், தேர்தலில் சீட்டு கொடுப்பது தொடர்பாக கர்நாடக காங்கிரஸில் அதிருப்தி கொழுந்துவிட்டு எரிகிறது. அதே போல், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார், முன்னால் முதல்வர் சித்தராமையா இடையே முதல்வர் பதவிக்கு போட்டி நிலவி வருகிறது.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு இன்று கூடுகிறது.
கர்நாடகா காங்கிரஸில் ஒற்றுமை தோன்றினாலும், மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தலைமையிலான கோஷ்டியினர் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடிப்பதற்கான சமிக்ஞைகள் தெரிகிறது.
மே 10-ம் தேதி நடைபெறும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், முதல்வராக பதவியேற்க, கட்சி எம்.எல்.ஏ.க்களின் அதிகபட்ச ஆதரவை உறுதி செய்ய இரு தலைவர்களும் அமைதியாக செயல்படுவதாக அறியப்படுகிறது. சமீபத்திய நாட்களில் தேர்தல் சீட்டு ஒதுக்கீடு குறித்து அதிருப்தி சலசலப்புகள் நிலவுகிறது. கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன் மொளகல்முரு (சித்ரதுர்கா மாவட்டம்) மற்றும் தரிகெரே (சிக்மகளூரு மாவட்டம்) தொகுதிகளில் இருந்து சீட்டு பெற விரும்புபவர்களின் ஆதரவாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பா.ஜ.க-வில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த மொளகல்முரு எம்.எல்.ஏ என்.ஒய். கோபாலகிருஷ்ணாவை சேர்த்துக் கொள்வதற்கு எதிராக ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். யோகேஷ் பாபுவை அந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். கோலாரில் முன்னாள் முதல்வரான சித்தராமையா போட்டியிட வேண்டும் என்று கோரி காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை போராட்டம் நடத்தினர். வெளியாட்கள் போட்டியிட களமிறக்குவதை கண்டித்து சிக்கமகளூரில் போராட்டம் நடந்தது.
ஜனவரி மாதம் காங்கிரஸில் இணைந்த மதச்சார்பற்ற் ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவர் ஒய்.எஸ்.வி. தத்தாவின் ஆடியோ வெளியான நிலையில், முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் கே.ஆர். ரமேஷ் குமாரின் பேச்சும் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை வெளிப்படுத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. பெலகாவி மற்றும் பிற மாவட்டங்களில் ஏராளமான கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் செலவினங்களுக்கு உதவி வழங்குவதன் மூலம் ஆதரவளித்தனர்.
ரமேஷ் குமார், ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் பேசிய உரையில், சித்தராமையாவை ஓரங்கட்டுவது காங்கிரஸின் தேர்தல் வாய்ப்புகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். சித்தராமையா அக்கட்சியை விட்டு வெளியேறினால், ஆந்திராவில் காங்கிரஸ் எதிர்கொள்ளும் நிலை கர்நாடகத்திலும் ஏற்படும். அவர் கோலாரில் போட்டியிடவில்லை என்றால், மாவட்டத்தில் காங்கிரஸ் மூழ்கிவிடும்” என்று ரமேஷ் குமார் கூறினார். 2018-ம் ஆண்டைப் போலவே அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதை உறுதிசெய்ய சித்தராமையாவின் ஆதரவாளர்கள் சிலர் திரண்டுள்ளனர்.
இந்த இரண்டு முகாம்களுக்கு இடையே உள்ள அடிப்படை வேறுபாடுகளை விளக்கும் மற்றொரு பிரச்னை ஒரு சில தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது, குறிப்பாக பெங்களூரு நகர்ப்புறத்தில் உள்ள புலகேசிநகர் உள்ளது. தற்போது புலகேசிநகர் எம்.எல்.ஏ-வாக உள்ள சித்தராமையாவின் விசுவாசி அகண்ட ஸ்ரீனிவாஸ் மூர்த்தி மீண்டும் போட்டியிட விரும்புகிறார். அதே போல, டி.கே. சிவக்குமார் ஆதரவுடன் பெங்களூரு முன்னாள் மேயர் சம்பத் ராஜ் ஆகியோர் இத்தொகுதியில் சீட்டு வாங்கி போட்டியிட விரும்புகின்றனர். வரும் தேர்தலில் இந்த தொகுதியில் அகண்ட ஸ்ரீனிவாஸ் தன்னை நிறுத்தாவிட்டால் ராஜினாமா செய்துவிட்டு சுயேச்சையாக போட்டியிடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். வேட்பாளர்கள் இறுதி செய்யப்படாத 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இரு முகாம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கிரஸின் மத்திய தேர்தல் கமிட்டி (சி.இ.சி) கூட்டம் பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
மற்ற கட்சிகளின் தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்குள் நுழைந்தது பல கட்சி தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை. அறுதிப் பெரும்பான்மையைப் பெறுவதற்கான காங்கிரஸின் திட்டங்களுக்கு இது சவாலாக உள்ளது. சிக்மகளூருவில், பா.ஜ.க பொதுச் செயலாளர் சி.டி. ரவியை எதிர்த்துப் போட்டியிடுவதற்காக, பா.ஜ.க முன்னாள் தலைவர் எச்.டி தம்மையாவை எதிர்க்கட்சிகள் சேர்த்துக்கொண்டுள்ளது. ஆனால், தம்மையாவுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்ததால் கட்சிக்குள் மோதல் நிலவியது. இது தொடர்பாக மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா மற்றும் சிவக்குமார் இருவரையும் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினர்.
சிவமோகாவில், தேர்தலில் போட்டியிடும் ஒரே குறிக்கோளுடன் மற்ற கட்சிகளில் இருந்து காங்கிரஸில் சேரும் வேட்பாளர்களை ஆதரிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் தலைவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.