/indian-express-tamil/media/media_files/2025/08/22/dks-2-2025-08-22-19-11-28.jpg)
பெங்களூருவில் நடந்த மாநில சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடரில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார். Photograph: (பி.டி.ஐ.)
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும் அம்மாநில துணை முதல்வருமான டி.கே.சிவக்குமார், வெள்ளிக்கிழமை கர்நாடக சட்டசபையில் அனைவரையும் திகைக்க வைத்தார். சின்னசாமி மைதானம் அருகே நடந்த கூட்ட நெரிசல் விபத்து குறித்து விவாதம் நடந்தபோது அவர் ஆர்.எஸ்.எஸ் கீதத்தை பாடினார். இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
சட்டசபையில் திடீரென ஒலித்த பாடல், அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அவர் ஆர்.எஸ்.எஸ் கீதமான 'நமஸ்தே சதா வாத்சலே மாத்ருபூமி'யின் முதல் சில வரிகளைப் பாடினார்.
இந்த கூட்ட நெரிசலுக்கு சிவக்குமார்தான் காரணம் என்று பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். மக்கள் மத்தியில் அவர் குழப்பத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.
பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்த ஆர்.சி.பி அணியினரை வரவேற்க சிவக்குமார் சென்றதாகவும், விமான நிலையத்திலிருந்து சின்னசாமி மைதானம் வரை கன்னட கொடியை அசைத்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த சிவக்குமார், “நான் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தில் (கே.எஸ்.சி.ஏ - KSCA) உறுப்பினராக இருக்கிறேன், அங்குள்ள கே.எஸ்.சி.ஏ செயலாளர் உட்பட அனைவரும் எனது நண்பர்கள். நான் பெங்களூருவின் பொறுப்பு அமைச்சர். நான் (ஜூன் 4-ம் தேதி) விமான நிலையத்திற்கும் மைதானத்திற்கும் சென்றேன். நான் கர்நாடக கொடியையும் வைத்திருந்தேன், நான் அவர்களுக்கு (ஆர்.சி.பி) வாழ்த்து தெரிவித்தேன், கோப்பையை முத்தமிட்டேன். நான் எனது கடமையைச் செய்தேன்” என்று கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது, “விபத்து நடந்தது. இதுபோன்ற சம்பவங்கள் மற்ற மாநிலங்களிலும் நடந்துள்ளன. தேவைப்பட்டால், மற்ற இடங்களில் நடந்த சம்பவங்களின் பட்டியலையும் நான் வாசிப்பேன். என்னைப் பற்றியும் உங்களுக்கு நிறைய சொல்ல வேண்டியுள்ளது” என்றார். தான் உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வராவுடன் வளர்ந்ததாகவும் துணை முதல்வர் கூறினார்.
இதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் பா.ஜ.க-வின் ஆர்.அசோகா, சிவக்குமார் ஒருமுறை ‘ஆர்.எஸ்.எஸ் சட்டி’ அணிந்திருந்ததாகக் கூறியதை நினைவுபடுத்தினார்.
சபையிலுள்ள அனைவருக்கும் வேடிக்கையாக, சிவக்குமார் 'நமஸ்தே சதா வாத்சலே மாத்ருபூமி' என்று பாடினார்.
எதிர்க்கட்சியினர் மேசைகளைத் தட்டி வரவேற்றனர், ஆனால், காங்கிரஸ் தரப்பில் முழுமையான அமைதி நிலவியது.
“இந்த வரிகள் பதிவுகளிலிருந்து நீக்கப்படாது என்று நம்புகிறேன்” என்று பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வி.சுனில் குமார் கேலி செய்தார்.
இதுபோன்ற சம்பவங்கள் நடந்த போதெல்லாம் அரசாங்கங்கள் பொறுப்பேற்றதுண்டா என்று சிவக்குமார் கேட்டார்.
“இந்த அரசாங்கம் (கூட்ட நெரிசலுக்குப் பிறகு) விரைவாக செயல்பட்டு, காவல்துறை அதிகாரிகள் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது குறித்து நீங்கள் பெருமைப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.