அமித்ஷா ‘வாய் தவறி’ பேசிய சில வார்த்தைகள் இந்த முறை கர்நாடகாவில் காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்திற்கு போதுமானது. எடியூரப்பாவுக்கு இது பெரும் தர்ம சங்கடம்!
கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் தேதி இன்று (மார்ச் 27) அறிவிக்கப்பட்டது. மே 12-ம் தேதி வாக்குப் பதிவும், மே 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டன.
கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் ஆள்கிறது. இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் ஒரே பெரிய மாநிலம் கர்நாடகாதான். எனவே இங்கும் காங்கிரஸை வீழ்த்தினால், ‘காங்கிரஸ் இல்லாத இந்தியா’ என்கிற தங்கள் கனவில் 95 சதவிகிதத்தை நிறைவேற்றியதாகிவிடும் என பாஜக கருதுகிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய முதல்வர் சித்தராமையாவுக்கு போட்டியாக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை முதல்வர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்துகிறது. எடியூரப்பாவை ஆதரித்து பிரசாரம் செய்ய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, கர்நாடக மாநிலம் வந்தார்.
கர்நாடகாவில் தேவாங்கர் நகரில் செய்தியாளர்களை அமித்ஷா சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் அண்மையில் கூறுகையில், நாட்டில் ஊழல் மிகுந்த அரசுகளுக்கு போட்டி வைத்தால் அதில் எடியூரப்பா அரசுக்குத்தான் முதல் இடம் கொடுக்க வேண்டியிருக்கும் என்றார்’ என பேட்டியில் குறிப்பிட்டார் அமித்ஷா.
எடியூரப்பா ஏற்கனவே கர்நாடகா முதல்வராக பதவி வகித்தவர் என்பது மட்டுமல்ல, ஊழல் புகாரில் சிக்கி மீண்டு வந்தவரும்கூட! எனவே அவரது பெயரை அமித்ஷா இப்படி குறிப்பிட்டது அருகில் இருந்த எடியூரப்பாவையும் அதிர வைத்துவிட்டது. கட்சி பிரமுகர் ஒருவர் உடனடியாக இதை சுட்டிக்காட்டியதும், வாய் தவறி கூறிவிட்டதை உணர்ந்த அமித்ஷா பின்னர் சித்தராமையா பெயரை கூறினார்.
அமித்ஷா வாய் தவறி தங்களது முதல்வர் வேட்பாளரை ஊழல்வாதியாக கூறிவிட்டது, நிமிட நேரத்தில் நாடு முழுவதும் வைரல் ஆகிவிட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்படி அமித்ஷாவின் பேட்டி வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ‘பாஜக தலைவர் அளித்த பரிசு, கர்நாடகாவில் எங்களது பிரசாரம் அருமையாக தொடங்கியிருக்கிறது’ என தனது ட்விட்டர் பதிவில் ராகுல் கூறியிருக்கிறார்.
அமித்ஷா அதே செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் கூறுகையில், ‘கர்நாடக முதல்வர் சித்தராமையா அணிந்திருக்கும் கைக்கடிகாரம் மட்டுமே ரூ40 லட்சம்! மோடி அரசு கர்நாடகாவுக்கு என்ன செய்தது? என சித்தராமையா கேட்கிறார். முந்தைய ஐ.மு.கூட்டணி ஆட்சியின் 13-வது நிதி கமிஷன் கர்நாடகாவுக்கு ஒதுக்கியது 88 ஆயிரம் கோடி ரூபாய்! இப்போது மோடி அரசின் 14-வது நிதி கமிஷன் ஒதுக்கிய தொகை, 2 லட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாய்!’ என குறிப்பிட்டார்.