கர்நாடகா தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவாக டிடிவி தினகரன் கட்சியினர் கடைசி நேரத்தில் களம் இறங்கினர். இதனால் திமுக ‘ஷாக்’ ஆகியிருக்கிறது.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தல், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு தேசியக் கட்சிகளுக்கும் கவுரவப் பிரச்னையாக மாறியிருக்கிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க சித்தராமையா தலைமையில் வியூகம் வகுத்தது. பாஜக தனது முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவைவிட, அதிகம் நம்பியது நரேந்திர மோடியின் இமேஜை!
கர்நாடகாவில் மொத்தமுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 223. ஆட்சி அமைக்க விரும்பும் கட்சி 112 இடங்களில் ஜெயித்தாக வேண்டும். காங்கிரஸ்-பாஜக இடையே நிலவும் கடும் போட்டி மற்றும் 3-வது அணியாக மதச்சார்பற்ற ஜனதா தளம் பிரிக்கும் வாக்குகள் ஆகியவற்றால், எந்தக் கட்சியுமே மிகப் பெரும்பான்மையுடன் ஜெயிக்க வாய்ப்பில்லை எனத் தோன்றுகிறது.
கர்நாடகாவில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியின் வெற்றியுமே காங்கிரஸுக்கும் பாஜக.வுக்கும் முக்கியமானதாக படுகிறது. இங்கு சுமார் 40 தொகுதிகளில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் அளவில் தமிழர்கள் வசிக்கிறார்கள். எனவேதான் பாஜக.வுக்காக தமிழிசை செளந்தரராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்களும், காங்கிரஸுக்காக ப.சிதம்பரம், திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் கர்நாடகாவில் முகாமிட்டு பிரசாரம் செய்தனர்.
இதற்கிடையே காங்கிரஸ் தரப்பில் கடைசி கட்டத்தில் இன்னொரு வியூகம் வகுத்தனர். கர்நாடக தமிழர்களின் வாக்குகளை அறுவடை செய்ய கர்நாடகாவில் உள்ள இதர கட்சிகளின் தமிழ்த் தலைவர்களையும் பயன்படுத்திக் கொள்வது என முடிவெடுத்தனர். அந்த வகையில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தவரான பெங்களூரு புகழேந்தியை அவர்கள் அணுகியதாக கூறப்படுகிறது.
பாஜக மீது ஏக கடுப்பில் இருக்கும் டிடிவி தினகரனும் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு தேவையான பணிகளை செய்யும்படி க்ரீன் சிக்னல் காட்டியிருக்கிறார். இதைத் தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் இருந்தும் டிடிவி ஆதரவாளர்கள் கர்நாடகாவில் குவிக்கப்பட்டனர்.
டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் கடைசி 3 நாட்கள் கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸுக்காக களமாடியிருக்கிறார்கள். இவர்களது பிரசாரத்தை பாஜக.வினர் உன்னிப்பாக கண்காணித்து மேலிடத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ் ஆகியோருடன் மு.க.ஸ்டாலின் நெருக்கம் காட்டுவதை காங்கிரஸ் விரும்பவில்லை. எனவே தமிழ்நாட்டில் திமுக.வை மட்டும் கூட்டணி ஆப்ஷனாக வைக்காமல், மாற்றுத் திட்டங்களையும் வகுக்கவே காங்கிரஸ் விரும்புகிறது.
அப்படி மாற்றுத் திட்டமாக அவர்கள் கண்ணில் படுகிறவர் டிடிவி தினகரன்! பாஜக மேலிடத்தால் கடும் நெருக்கடிக்கு உள்ளான அவருடன் அணி சேர்ந்தால், காங்கிரஸுக்கு முழு மூச்சுடன் உதவி செய்வார் என தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கணக்கு போடுகிறார்கள். தவிர, திருநாவுக்கரசர், வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட திமுக கூட்டணித் தலைவர்களுடன் டிடிவி தினகரன் தனிப்பட்ட முறையில் சுமூக நட்புடன் இருக்கிறார்.
எனவே தமிழ்நாட்டில் மேற்படி கட்சிகள் எந்த நேரத்திலும் திமுக.வை கைகழுவிவிட்டு டிடிவி தினகரனை நோக்கி பாயும் வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது. அதற்கு முன்னோட்டம்போல கர்நாடகாவில் காங்கிரஸும், டிடிவி தினகரன் கட்சியும் கைகோர்த்திருப்பதை பார்க்க வேண்டியிருக்கிறது.
கர்நாடகாவில் பாஜக.வுக்கு எதிராக தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் என திமுக அணியில் உள்ள திருமாவளவன் வெளிப்படையாக அறிக்கை விட்டார். ஆனால் திமுக தரப்பில் அப்படி யாரும் எந்த வேண்டுகோளையும் விடவில்லை. கர்நாடகாவில் அமைப்பு ரீதியாக உள்ள திமுக.வினரும் அங்கு காங்கிரஸை கண்டு கொள்ளவில்லை. இதெல்லாம் இப்போது விவாதங்களாக மாறி வருகின்றன.