Advertisment

மாநில தலைமையின் பங்கு, கிளர்ச்சியாளர்கள்; தேர்தல் தோல்வி குறித்த சுயபரிசோதனைக்கு தயாராகும் கர்நாடக பா.ஜ.க

கர்நாடகாவில் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷின் தலையீடு; எடியூரப்பா ஆதரவு அதிருப்தியாளர்களால் ஏற்பட்ட இழப்பு; தோல்விக்கான காரணங்களை ஆராயும் பா.ஜ.க

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BL Santhosh

பா.ஜ.க தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ்

Liz Mathew , Akram M

Advertisment

கர்நாடகாவில் பா.ஜ.க தனது கணிசமான தேர்தல் தோல்வி மற்றும் அதற்கு என்ன வழிவகுத்தது என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ளத் தொடங்கும் போது, ​​முக்கியமான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் ஒரு அம்சம், கட்சியின் பிரச்சாரத்தை வடிவமைத்த மாநிலத் தலைமையும் அதன் உள்ளீடுகளும் ஆகும்.

தேர்தல் முடிவுகள் குறித்து முறையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு முன், இன்னும் தங்கள் தொகுதிகளில் இருக்கும் அதன் தலைவர்கள் திரும்பி வருவதற்காக பா.ஜ.க காத்திருக்கிறது. இதுகுறித்து கட்சித் தலைவர் ஒருவர் கூறியதாவது: தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மாநில மற்றும் மத்திய தலைவர்கள் கூடி விரிவான ஆய்வு நடத்துவார்கள். நாங்கள் எங்கு மோசமாக தோற்றோம், கட்சி எங்கு தவறு செய்தது, எங்கள் வியூகத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பொதுத் தேர்தலுக்கு முன்பாக ஆராய்வோம்.

இதையும் படியுங்கள்: எடியூரப்பாவின் ஆதரவாளர்களை ஓரங்கட்டிய பா.ஜ.க.,வுக்கு பலத்த அடி; எதிர்கட்சி சார்பில் போட்டியிட்டு 10 இடங்களில் வெற்றி

மாநில அளவிலான பிரச்சாரத் திட்டமிடலுக்கான முக்கியப் பொறுப்பில் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் இருந்தார், பெரும்பாலான மாநில பா.ஜ.க தலைவர்கள் அவருடைய நம்பிக்கைக்குரியவர்களாகக் கருதப்பட்டனர். இதில் பா.ஜ.க கர்நாடக தலைவர் நளின் கட்டீல், தேசிய பொதுச் செயலாளர் சி.டி ரவி மற்றும் தெற்கு பெங்களூரு எம்.பி தேஜஸ்வி சூர்யா ஆகியோர் அடங்குவர்.

பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் கூறியதாவது: மாநில தலைவர் நளின் கட்டீலுக்கு எதிரான அதிருப்தி குறித்து பல கட்சி தலைவர்கள் தேசிய தலைமையிடம் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, மேலும் அவர் தலைவராக தொடர அனுமதிக்கப்பட்டார்.

ஓரங்கப்பட்ட பி.எஸ் எடியூரப்பா முகாமைச் சேர்ந்த பல லிங்காயத் தலைவர்கள் பா.ஜ.க வேட்பாளர்களை தோற்கடித்ததும் மறு ஆய்வு அட்டவணையில் இருக்கும் ஒரு காரணியாகும். சந்தோஷ் தேசிய அரசியலுக்கு சென்றுவிட்ட நிலையில், கர்நாடக விவகாரங்களை சந்தோஷ் "கையாண்டது" குறித்து ஆட்சேபம் தெரிவித்திருந்த, மாநிலத்தின் பல தலைவர்களில் அவரும் ஒருவர். எடியூரப்பா முகாமில் உள்ள பலர், சந்தோஷின் ஆதரவில் இருந்து அவரது போட்டியாளர்கள் பலம் பெற்றதாக குற்றம் சாட்டுகின்றனர். எடுத்துக்காட்டாக, பா.ஜ.க மூத்த தலைவர் எடியூரப்பா தனது மகனுக்கு டிக்கெட்டைத் தேடிக்கொண்டிருந்தபோது, ​​டிக்கெட் விநியோகத்தின் போது எடியூரப்பாவை சி.டி.ரவி கடுமையாகத் தாக்கினார்.

இந்த முறை சந்தோஷ் ஆதரவுடன் களமிறங்கிய சி.டி.ரவி மற்றும் சில தலைவர்கள் தோல்வியடைந்த நிலையில், 2018 இல் சந்தோஷ் ஆதரித்த பல வேட்பாளர்களும் எப்படி தோல்வியடைந்தார்கள் என்பதை ஆதாரங்கள் சுட்டிக்காட்டின.

ஆர்.எஸ்.எஸ் வட்டாரங்கள் கூறுகையில், சங்க தலைமைக்கு இந்த விவகாரங்களில் சிலவற்றைப் பற்றி தெரியப்படுத்தப்பட்டுள்ளது, அதையொட்டி, இந்த விவகாரம் பா.ஜ.க தலைமைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சந்தோஷ் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து பா.ஜ.க.,வுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு தரப்பிலிருந்தும், பல பா.ஜ.க தலைவர்கள் சந்தோஷின் செயல்பாடு குறித்து ஆர்.எஸ்.எஸ்-ஐ அணுகியதாக நம்பப்படுகிறது.

தேர்தலில் டிக்கெட் மறுக்கப்பட்டதால், கட்சியில் இருந்து விலகிய நீண்டகால பா.ஜ.க தலைவரான ஜெகதீஷ் ஷெட்டர் தேர்தலுக்கு முன், சந்தோஷை பகிரங்கமாகத் தாக்கிப் பேசினார். சந்தோஷ் பா.ஜ.க.,வில் சேர்ந்த உடனேயே, "கர்நாடக பா.ஜ.க.,வின் முழுக் கட்டுப்பாட்டையும் எடுத்துவிட்டார்" என்றும், மாநில அலகு "சந்தோஷ் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களின் பிடியில் உள்ளது" என்றும் ஆறு முறை பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக இருந்த ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

67 வயதான ஜெகதீஷ் ஷெட்டர் சமீபத்திய தேர்தலில் ஹூப்ளி-தர்வாட் மத்திய தொகுதியில் இருந்து சந்தோஷ் ஆதரவாளராகக் கருதப்படும் பா.ஜ.க.,வின் மகேஷ் தெங்கினகாயிடம் தோற்றார்.

முன்னாள் துணை முதல்வரும் மற்றொரு லிங்காயத் தலைவருமான லக்ஷ்மண் சவடி, பா.ஜ.க.,வை விட்டு விலகி காங்கிரஸில் சேர்ந்ததற்கும் சந்தோஷ் தான் காரணம். இந்த தேர்தலில் லக்‌ஷ்மண் சவடி வெற்றி பெற்றுள்ளார்.

பலமுறை முயற்சித்தும், சந்தோஷ் கருத்துக்கு கிடைக்கவில்லை. ஆனால் கட்சியில் உள்ள அவரது கூட்டாளிகள் அவரை வலுவாக பாதுகாக்கின்றனர் மற்றும் தோல்வியுடன் அவரை தொடர்புபடுத்தும் கூற்றுக்களை நிராகரிக்கின்றனர். தேர்தலில் வெற்றி பெற்ற சந்தோஷின் நம்பிக்கைக்குரிய முன்னாள் கல்வி அமைச்சர் டாக்டர் சி.என் அஸ்வத்நாராயணன், "அவதூறு பிரச்சாரத்தை" சாடினார் மற்றும் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சி என்று கூறினார்.

“அதிகார ஆசையின்றி, கட்சிக்காகவும், தேசத்துக்காகவும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த நபர்களை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத சக்திகளின் கடைசி ஆயுதம் அவதூறு... கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கில் இதுபோன்ற எதிர்மறையான கருத்துக்களை பரப்புபவர்களிடம் கவனமாக இருப்பது இந்த நேரத்தில் மிகவும் அவசியம். தேர்தல் தோல்வி பற்றிய சுயபரிசோதனை இருக்கும். அடுத்த வெற்றிக்கான பாதையை அது எங்களுக்கு காட்டும்” என்று அவர் கூறினார்.

பெயர் வெளியிட விரும்பாத பா.ஜ.க நிர்வாகி ஒருவர், சந்தோஷ் மீது பழி சுமத்துவது நியாயமற்றது என்றும், கட்சி வெற்றி பெற்றிருந்தால் அவருக்கு கிரெடிட் கிடைத்திருக்குமா என்றும் கேள்வி எழுப்பினார். "இது ஒரு பழி விளையாட்டு, கட்சி ஒரு "கூட்டு அமைப்பாக" தோல்வியடைந்தது,” என்றும் அவர் கூறினார்,

சி.டி ரவி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், சந்தோஷ் “சித்தாந்தத்திற்காக வேலை செய்கிறார். அவர் எவ்வளவு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார் என்பது ஒவ்வொரு கட்சிக்காரருக்கும் தெரியும்,” என்று கூறினார்.

எடியூரப்பாவின் முன்னாள் கூட்டாளிகள் போட்டியிட்ட மத்திய கர்நாடகா பகுதியில் குறைந்தது 10 இடங்களில் பா.ஜ.க வேட்பாளர்கள் தோல்வியடைந்ததையும் கட்சி கணக்கில் எடுத்துக்கொள்ள உள்ளது. இதில் ஒன்றான சிக்மகளூர் தொகுதியில் சி.டி.ரவி 5,926 வாக்குகள் வித்தியாசத்தில் எச்.டி தம்மையாவிடம் தோல்வியடைந்தார். காங்கிரஸால் களமிறக்கப்பட்ட தம்மையா, லிங்காயத் இனத்தைச் சேர்ந்தவர் மற்றும் எடியூரப்பாவின் நெருங்கிய கூட்டாளி.

2013-ல் பா.ஜ.க.,வுக்கு எதிராக கோபமடைந்த எடியூரப்பாவின் கிளர்ச்சியால் ஏற்பட்ட இழப்பின் மூலம், ​​கடினமான வழியில் பாடம் கற்றுக்கொண்ட போதிலும், கட்சி மீண்டும் லிங்காயத் தலைவரான எடியூரப்பாவை ஓரங்கட்டியது. முதலில் அவரை முதல்வராக இறக்கிவிட்டு, பின்னர் கடைசி நிமிடத்தில் அவருக்கு டிக்கெட் மறுத்தது.

தற்போது, ​​2021ல் எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்குவது குறித்து, அவரது விருப்பத்திற்கு எதிராக மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. எடியூரப்பா பின்னர் பா.ஜ.க.,வின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான நாடாளுமன்ற வாரியம் மற்றும் மத்திய தேர்தல் குழுவில் பெயரிடப்பட்டாலும், மாநில பா.ஜ.க.,வில் உள்ள பலர் எடியூரப்பா இன்னும் முதல்வராக இருந்திருந்தால் பா.ஜ.க வென்றிருக்கலாம் என்று நம்புகிறார்கள்.

எடியூரப்பாவுக்கும் சந்தோஷுக்கும் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் நீண்டகால மற்றும் அறியப்பட்ட பகை உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு, இந்த தகராறு பொது சலசலப்பில் பரவியபோது, ​​பா.ஜ.க நான்கு தலைவர்களை கட்சியின் மூத்த பதவிகளில் இருந்து நீக்கியது.

தேசிய அளவில், கர்நாடகாவில் பா.ஜ.க.,வின் மோசமான செயல்பாடு, தெற்கில் மிகவும் சமத்துவமான சமூக அமைப்பை முன்னெடுப்பதில் நலத்திட்டங்களின் பங்கைக் கருத்தில் கொண்டு, இலவசங்கள் குறித்த கட்சியின் நிலைப்பாடு குறித்து சில "இரண்டாவது சிந்தனைகளை" தூண்டியுள்ளது. முன்னர் "ரெவ்டி கலாச்சாரம்" என்று நிராகரித்த பிரதமர் நரேந்திர மோடியே அதை வெளிப்படுத்தினார்.

காங்கிரஸின் ஐந்து தேர்தல் உத்தரவாதங்கள் மீதான மோடியின் தாக்குதல் வாக்காளர்களிடம் எதிரொலியைக் காணவில்லை என்று பா.ஜ.க தலைவர்களில் ஒரு பகுதியினர் நம்புகிறார்கள்.

ஒட்டுமொத்தமாக இருந்தாலும், இந்த முடிவுகள், மத்தியில் மோடியின் தலைமை அல்லது அரசு குறித்த மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பு அல்ல. அது 2024 மக்களவைத் தேர்தலில் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும் என்பது அக்கட்சியின் மதிப்பீடு.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Karnataka Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment