மல்லிகார்ஜுன கார்கே முதல்வரானால் அவருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார். ஆனால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவரின் தற்போதைய பொறுப்புகளின் அடிப்படையில் அதற்கான சாத்தியம் வெகு தொலைவில் உள்ளது.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவுக்கும் இடையே வேட்பாளர் தேர்வு தொடர்பாக மோதல் நிலவி வரும் நிலையில், மே 10ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முதல்வராக பதவியேற்றால் அவர் தலைமையில் பணியாற்றத் தயாராக இருப்பதாக சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மாநில அரசியலுக்கு மீண்டும் முதல்வராக வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, டி.கே. சிவக்குமார் “மல்லிகார்ஜுன் கார்கே எனது தலைவர். அவர் எனது கட்சியின் தேசியத் தலைவர். கார்கே எனக்கு 20 வயது மூத்தவர். அவருடைய சீனியாரிட்டியையும் தியாகத்தையும் மதிக்க வேண்டும். அவர் கர்நாடக முதல்வராகும் பட்சத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன்.” என்று சனிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
தொடர்ந்து பேசிய டி.கே. சிவக்குமார், “கார்கே இந்த நாட்டுக்கும் மாநிலத்திற்கும் ஒரு சொத்து. கட்சி எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் கட்டுப்படுவேன். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நள்ளிரவில் ராஜினாமா செய்தார். தொகுதி தலைவராக இருந்து, காங்கிரசின் தேசிய தலைவராகி உள்ளார். இது காங்கிரசில் மட்டுமே நடக்க முடியும். அவர் முதல்வரானால் மகிழ்ச்சியுடன் பணியாற்றுவேன்” என்றார்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில், முதல்வர் கேள்வியைத் தவிர்த்த சித்தராமையா, “யாராவது முதல்வர் ஆக விரும்பினால், அதில் எந்தத் தவறும் இல்லை. இறுதியில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், சட்டமன்றக் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள்.அதன் பிறகு உயர்மட்டக் குழு முடிவெடுக்கும். இது ஒரு ஜனநாயக அமைப்பு.” என்று கூறினார்.
தற்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பில் இருப்பதால், கார்கே முதல்வராகும் வாய்ப்பு வெகு தொலைவில் உள்ளது. மூத்த தலைவர் இரண்டு முறை மாநிலத்தின் உயர் பதவிக்கு போட்டியிட்டார். 2008 தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததால் அந்த வாய்ப்பு அவருக்கு வரவில்லை. 2013-ல், முதல்வர் பதவிக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (ஓ.பி.சி) முகத்தை விரும்புவதால், சித்தராமையாவை முதல்வராக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக கர்நாடகாவில் இதுவரை இல்லாத வகையில், ஒரு தலித் முதல்வரை நியமிப்பது குறித்து காங்கிரஸ் கட்சி விவாதித்து வருவதால், கார்கே இந்த முறை முதல்வருக்கான வாய்ப்பாக நிற்கிறார்.
கர்நாடக காங்கிரஸில் சிவகுமாருக்கும், சித்தராமையாவுக்கும் இடையேயான மோதல், தேர்தலில் சீட்டு வழங்குவது குறித்த பேச்சுவார்த்தையின் போது வெளிப்பட்டது. கர்நாடக மாநிலம் முழுவதும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் சித்தராமையாவுக்கு நல்ல கருத்து இருந்தாலும், தெற்கு கர்நாடகத்தில் நடந்த உரையாடல்களில் சிவகுமார் தனது செல்வாக்கை செலுத்தினார். ஐதராபாத்-கர்நாடகா பகுதிக்கான சீட்டு ஒதுக்கீட்டில் கார்கே முக்கியப் பங்காற்றினார். அவருடைய வற்புறுத்தலின் பேரில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யு.பி.ஏ) அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் 2012-ல் அரசியலமைப்பின் 371 (ஜே) பிரிவின் கீழ் கர்நாடகா சிறப்பு மேம்பாட்டு வகை அந்தஸ்தைப் பெற்றது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காங்கிரஸ் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காது என்று கார்கே தெரிவித்திருந்தார். “தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்யப்படும். தேர்தலுக்குப் பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களிடம் கருத்து கேட்கப்படும். யார் முதல்வர் ஆக வேண்டும் என்பதை அரசியல் உத்திகளின் அடிப்படையில் உயர்மட்டக் குழு முடிவு செய்யும். முதல்வரை தேர்ந்தெடுப்பது தேர்தலுக்கு முன் முடிவு செய்யப்படுவதில்லை. ஏனெனில், அது சண்டைக்கு வழிவகுக்கும்” என்று கார்கே கடந்த மாதம் கூறினார்.
ஏப்ரல் 6-ம் தேதி வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு, சிவக்குமார் கட்சி வேறுபாடுகளைக் களைய வேலை செய்து வருவதாக சனிக்கிழமை கூறினார். 12 விண்ணப்பதாரர்கள் அதிருப்தி வேட்பாளர்களாகப் போட்டியிடப் போவதாக மிரட்டுகின்றனர். “அரசியலில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜம். சீட்டு கிடைக்காதவர்களிடம் பேசி வருகிறோம். எல்லோருக்கும் சீட்டு கொடுக்க முடியவில்லை. அரசியல் என்பது பகிர்ந்து கொள்வதும் அக்கறை கொள்வதும்தான்” என்று சிவக்குமார் கூறினார். “நாங்கள் ஆட்சி அமைத்தால் கவுன்சில்கள், வாரியங்கள், கார்ப்பரேஷன்களில் பல பதவிகள் இருக்கும். பொறுமை காக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். சில வருடங்களாக காத்திருந்து புதிய வேட்பாளர்களுக்கு இடமளிக்கப்படுவதால் அவர்கள் கோபப்படுவது இயல்புதான்” என்று டி.கே. சிவக்குமார் கூறினார்.
சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் சமூக நீதி வழங்குவதற்கான பிரச்சினையை தீர்க்க காங்கிரஸ் முயற்சி செய்துள்ளது. அதே நேரத்தில் கணக்கெடுப்புகளையும் நம்பியுள்ளது என்று கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிவக்குமார் கூறினார். “நாங்கள் பெட்டியைப் பயன்படுத்தவில்லை, பா.ஜ.க-வைப் போல மக்களை வாக்களிக்கச் சொல்லவில்லை. நாங்கள் எங்கள் மக்களிடமும் பேசினோம். நாங்கள் கணக்கெடுப்பு அறிக்கைகளை மட்டும் நம்பவில்லை. சில சந்தர்ப்பங்களில், நாங்கள் சமூக நீதியின் அளவுகோலைப் பின்பற்றுகிறோம். எஸ்சி வலது, எஸ்சி இடது, சிறுபான்மையினர், கிறிஸ்தவர்கள், ஜெயின்கள், ஓபிசி, வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத்துகளுக்கு சீட்டு வழங்க வேண்டும். எங்களால் அனைத்து சமூகங்களையும் ஆதரிக்க முடியவில்லை.” என்று கூறினார்.
லிங்காயத்துகள் இந்த முறை அதிக இடங்களைப் பெறுவார்கள் என்றும் சிவக்குமார் கூறினார். இதுவரை 166 வேட்பாளர்களின் இரண்டு பட்டியல்களில், 43 லிங்காயத்துகளுக்கு 2018-ம் ஆண்டு ஒதுக்கீட்டிற்கு இணையாக சீட் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி கர்நாடக மாநிலத்திற்கு அடிக்கடி வருவது குறித்து சிவக்குமார் கூறுகையில், “பிரதமர் எத்தனை முறை வேண்டுமானாலும் வரட்டும். அவர் கர்நாடகாவில் இருக்கட்டும். பிரதமரின் அடிக்கடி வருகைகள் மாநிலத்தில் பா.ஜ.க பலவீனமாக இருப்பதைக் காட்டுகிறது. அவர்கள் தங்களால் இயன்றவரை முயற்சி செய்கிறார்கள். ஆனால், அவர்கள் தோல்வியைச் சந்திக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அதனால், அவர்கள் அதை ஈடுசெய்ய முயற்சி செய்கிறார்கள்.” என்று சிவக்குமார் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.