Karnataka Assembly Election Results 2018 Live Updates : கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018 முடிவுகள் நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.
Karnataka Assembly Election Results 2018 Live Updates, கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2018 LIVE UPDATES இங்கே ஐஇ தமிழ் தருகிறது.
Karnataka Assembly Election Results 2018 Live Updates : கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2018 இன்று (மே 15) வெளியாகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. அதன் Live Updates தொடர்ந்து இங்கு வெளியாகும்.
கர்நாடகா தேர்தல் முடிவுகள் 2018 : வெற்றி - முன்னணி எண்ணிக்கை நிலவரம் - ஆங்கிலத்தில்!
கர்நாடகா சட்டமன்றம், 224 உறுப்பினர்களைக் கொண்டது. அங்கு 222 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு கடந்த 12ம் தேதி நடந்து முடிந்தது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த கர்நாடக தேர்தல் ஒரு முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. எனவே பாஜகவும், காங்கிரசும் தங்களின் பலத்தை நிரூபிக்க கடுமையாகப் போராடின.
கர்நாடகா தேர்தல் களத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத மற்ற கட்சிகளான, இந்திய குடியரசு கட்சி, ஆம் ஆத்மி, மஜத ஆகியன கடந்த வருடம் நவம்பர் மாதம் முதலே பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டன. கடந்த ஜனவரி மாதம் கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அதன் பின் பாஜக தலைவர் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மே மாதம் தொடங்கியதில் இருந்து அங்குப் பிரச்சாரம் மிகவும் சூடு பிடிக்கத் தொடங்கியது.
கர்நாடகா தேர்தலுக்காக பிரதமர் மோடி அனைத்துத் தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். இரண்டு வருடங்களாக எந்தப் பிரச்சாரத்திலும் ஈடுபடாமல் இருந்த காங்கிரஸின் சோனியா காந்தி, கர்நாடக தேர்தலுக்காகப் பிரச்சாரம் செய்தார். பலத்த வார்த்தைப் போர், இரு கட்சியினரின் குழப்பப் பேச்சுகள், இரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகளின் தவறை சுட்டிக்காட்டுவது என சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து முடிந்தது.
கர்நாடகா தேர்தல் முடிவுகள் 2018 LIVE UPDATES
இரவு 7.30 : இரவு 7.30 மணி நிலவரப்படி 8 தொகுதிகளின் முடிவுகள் மட்டும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை அந்த 8 தொகுதிகளில் 5-ல் பாஜக.வும், 3-ல் காங்கிரஸும் முன்னிலை பெற்றிருந்தன. இந்த அடிப்படையில் ரிசல்ட் அமைந்தால் பாஜக 104, காங்கிரஸ் 78, ம.ஜ.த 37 என எண்ணிக்கை அமைக்கிறது. எந்தக் கட்சிக்கும் தனி மெஜாரிட்டிக்கு தேவையான 112 இல்லை என்பது உறுதி ஆகிவிட்டது.
இரவு 7.00 : யாரை ஆட்சி அமைக்க அழைப்பது என்பது குறித்து ஆளுனரே முடிவு செய்ய இருக்கிறது. எனவே கர்நாடகாவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு தொடர்பான பந்து, இப்போது ஆளுனரின் கோர்ட்டில்!
மாலை 5.50 : ஆளுனருடன் குமாரசாமி சந்தித்தபோது, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், சித்தராமையா ஆகியோரும் உடன் சென்றனர்.
மாலை 5.45 : எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் தனிப் பெரும் கட்சியை ஆளுனர் அழைக்க வேண்டும் என கூறியிருப்பதை சுட்டிக்காட்டி எடியூரப்பா, ஆளுனர் வாஜூபாய் ருதாபாய் வாலாவிடம் கடிதம் கொடுத்தார். ஆட்சி அமைக்க உரிமை கோரியிருப்பதாக பின்னர் நிருபர்களிடம் தெரிவித்தார் எடியூரப்பா.
மாலை 5.25 : எடியூரப்பாவுடன் மத்திய அமைச்சர் அனந்தகுமாரும் ஆளுனரை சந்திக்க சென்றார். தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜக.வை ஆளுனர் அழைப்பாரா? அல்லது கூட்டணியாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ள குமாரசாமியை அழைப்பாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
மாலை 5.24 : குமாரசாமி ஆளுனர் மாளிகைக்கு வந்தார். அவரும் ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்ததாக தெரிகிறது.
மாலை 5.20 : எடியூரப்பா சுமார் 20 நிமிடங்கள் ஆளுனருடன் சந்தித்து பேசினார். தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க உரிமை கோருவது குறித்து ஆளுனருடன் அவர் ஆலோசித்ததாக தெரிகிறது.
மாலை 5.10 : ஆளுனரை சந்திக்க பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா வந்தார்.
மாலை 4.30 : ஆளுனரை சந்திக்க அனுமதி கேட்டு குமாரசாமி கடிதம் கொடுத்தார். தேர்தல் ஆணைய அதிகாரபூர்வ தகவலுக்கு காத்திருப்பதாக ஆளுனர் தரப்பில் கூறப்பட்டது.
மாலை 3.30 : காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து இன்று மாலை ஆளுனரை சந்திக்க இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். ஆனால் இவர்களது கோரிக்கையை ஏற்று ஆளுனர் சந்திக்க அனுமதி கொடுக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாலை 3.10 : காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் கூறுகையில், ‘தேவகவுடா, குமாரசாமி ஆகியோருடன் தொலைபேசியில் பேசியிருக்கிறோம். எங்களது ஆதரவை அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஒன்றாக இருப்போம் என நம்புகிறோம்’ என குறிப்பிட்டார்.
மாலை 3.00 : காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவகவுடாவுடன் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘கூட்டணி ஆட்சி சாத்தியம்தான்’ என அப்போது சோனியா குறிப்பிட்டதாக தெரிகிறது.
பிற்பகல் 2.40 : கர்நாடகா தேர்தல் நிலவரம் தொடர்பாக காங்கிரஸ் சார்பில் மாலை 3.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக தெரிகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க ஆளுனரிடம் அனுமதி கேட்க முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிற்பகல் 2.00 : பிற்பகல் நிலவரப்படி, பாஜக 31 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. 74 தொகுதிகளில் முன்னணியில் இருக்கிறது. எனவே பாஜக.வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்குமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
இதைத் தொடர்ந்து காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகளும் பரிசீலிக்கப்படுகின்றன. மதசார்பற்ற ஜனதா தள தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமியை முதல்வர் ஆக்க சம்மதித்து, காங்கிரஸ் பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டதாக தகவல்கள் வருகின்றன. இது முக்கிய அரசியல் திருப்பம்!
பகல் 1.00 : முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கர்நாடகா பாஜக வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
On this cheerful occasion, I wish to express my warm greetings and felicitations for the significant victory of BJP in Karnataka Assembly Elections, bellwethering a grand entry to South India. @AmitShah pic.twitter.com/rW6YphhI7S
— O Panneerselvam (@OfficeOfOPS) 15 May 2018
ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக மோடிக்கும், அமித்ஷாவுக்கும் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.
I would like to share my joy on this momentous occasion &convey my congratulations on the resounding victory of BJP in #KarnatakaElection. Your dilligent &conscientious efforts not only yielded fruits in 15th state but also added another feather in your cap of glory @narendramodi pic.twitter.com/zaxojL3tq2
— O Panneerselvam (@OfficeOfOPS) 15 May 2018
பகல் 12.30 : கர்நாடகா வெற்றி மூலமாக எங்களது தெற்கு திசை நோக்கிய பயணம் தொடங்கிவிட்டது என பாஜக தேசிய செயலாளர் ராம் மாதவ் கூறியிருக்கிறார்.
பகல் 12.05 : கர்நாடகாவில் பாஜக.வின் வெற்றியை டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், நிர்மலா சீதாராமன் ஆகியோர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
Union Ministers Ravi Shankar Prasad and Nirmala Sitharaman celebrate at party headquarters in Delhi #KarnatakaElectionResults pic.twitter.com/ZLsHco9eR2
— ANI (@ANI) 15 May 2018
பகல் 12.00 : பகல் 12 மணி நிலவரப்படி, பாஜக தனி மெஜாரிட்டிக்கு தேவையான 112 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 68 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 39 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.
பகல் 11.45 : பாஜக தனிப் பெரும்பான்மை வெற்றியை நோக்கிப் பயணித்தாலும், மாநில அளவில் இரு கட்சிகளின் வாக்கு சதவிகிதம் 37 சதவிகிதத்தை ஒட்டியே அமைந்திருக்கின்றன. இன்னும் சொல்வதானால், காங்கிரஸின் வாக்கு சதவிகிதம் இப்போதைக்கு 0.9 சதவிகிதம் அதிகமாகவே இருக்கிறது.
பகல் 11.35 : கர்நாடகா தேர்தல் எக்சிட் போல் முடிவுகளில் தனிப்பெரும் கட்சியாக பாஜக வரும் என பெரும்பாலானவை கணித்தன. ஆனால் பாஜக தனிப்பெரும்பான்மையை நோக்கிப் பயணிக்கும் என கணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#KarnatakaElections2018 #Decision2018 Reality check: Exit polls vs current trends. ???? pic.twitter.com/0nF6XH3Olr
— The Indian Express (@IndianExpress) 15 May 2018
பகல் 11.30 : முதல்வர் சித்தராமையா பதாமி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஸ்ரீராமுலுவைவிட 3000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா 18,000 வாக்குகள் பின் தங்கி தோல்வி முகத்தில் இருக்கிறார்.
காலை 11.10 : காலை 11 மணி நிலவரப்படி, பாஜக அறுதிப் பெரும்பான்மைக்கும் அதிகமாக 121 தொகுதிகளில் முன்னிலை பெறுகிறது. காங்கிரஸ் 59 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 41 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.
கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018 முடிவுகள் : தலைவர்கள் ரீயாக்ஷன் ... இங்கு ‘க்ளிக்’ செய்யவும்.
காலை 10.30 : காலை 10.30 மணி நிலவரப்படி பாஜக 108 இடங்களில் முன்னிலை பெறுகிறது. தனி மெஜாரிட்டிக்கு தேவையான 112 தொகுதிகளை முன்னணி நிலவரத்தில் நெருங்குகிறது பாஜக. ஆளும்கட்சியான காங்கிரஸ் 67 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. ஜனதா தளம் 45 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் திரு. எடியூரப்பா அவர்களுக்கு வாழ்த்துகள். புதிதாக பொறுப்பேற்கும் பா.ஜ.க அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழக காவிரி உரிமையை மீறாமல் விரைவில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். #KaranatakaVerdict
— M.K.Stalin (@mkstalin) 15 May 2018
காலை 10.15 : காலை 10.15 மணி நிலவரப்படி பாஜக 103 தொகுதிகளிலும், காங்கிரஸ் 68 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 48 தொகுதிகளிலும் முன்னிலை பெறுகின்றன. பாஜக தனிப்பெரும் கட்சியாக வருகிறது. தனிப்பெரும்பான்மை பெறுமா? என்பது போகப் போக தெரியும்.
காலை 9.45 : காங்கிரஸை விட பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெறுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. பெங்களூருவில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் வெறிச்சோடி கிடக்கிறது.
பெங்களூருவில் வெறிச்சோடிய காங்கிரஸ் அலுவலகம்
காலை 9.15 : கர்நாடகா முதல்வர் சித்தராமையா போட்டியிட்ட இரு தொகுதிகளில் ஒன்றான பதாமியில் முன்னணி பெறுகிறார். இங்கு இவரை எதிர்த்து மலைவாழ் சமூகத்தை சேர்ந்த வலிமையான தலைவரான ஸ்ரீராமுலுவை பாஜக நிறுத்தியிருக்கிறது. அருகில் உள்ள பெல்லாரி மாவட்டத்தின் ரெட்டி சகோதரர்களுக்கு ஸ்ரீராமுலு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காலை 9.10 : காலை 9 மணி நிலவரப்படி முன்னணி நிலவரத்தில் பாஜக முந்துகிறது. முன்னணி நிலவரம் தெரிந்த 186 தொகுதிகளில் பாஜக-82, காங்கிரஸ்-78, மதச்சார்பற்ற ஜனதா தளம்-26 என முந்துகின்றன.
காலை 8.35 : காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளாலும் 112 இடங்களில் ஜெயிக்க முடியாதபட்சத்தில் தொங்கு சட்டசபை தவிர்க்க முடியாதது. அப்போது மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடா ‘கிங்மேக்கராக’ உருவெடுப்பார்.
கர்நாடகா தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 20 முதல் 40 இடங்கள் வரை கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. கடந்த 2013 தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு 40 இடங்களும், 2008-ல் 28 இடங்களும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
காலை 8.30 : முதல் 30 நிமிடங்கள் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் காங்கிரஸுக்கும் பாஜக.வுக்கும் இடையே கடும் போட்டிக்கான சூழல் தெரிகிறது. காங்கிரஸ் 45 தொகுதிகளிலும், பாஜக 44 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 22 தொகுதிகளிலும் தபால் வாக்குகளில் முன்னிலை பெற்று வருகின்றன.
காலை 8.25 : பாஜக.வின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, இன்று காலை விசேஷ பூஜை நடத்தி வழிபட்டார்.
BJP's CM candidate BS Yeddyurappa offered prayers, earlier today, on counting day for #KarnatakaElections2018 pic.twitter.com/DLeywdryR8
— ANI (@ANI) 15 May 2018
காலை 8.20 : தபால் வாக்குகளில் முன்னணி தெரிந்த 37 தொகுதிகளில் காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 7 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றன. இது ஆரம்ப நிலவரம். இதில் மாற்றம் நிகழவும் வாய்ப்பு உண்டு.
காலை 8.15 : முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. மாநிலம் முழுவதும் மொத்தம் பணியில் இருப்பவர்களின் 28,000 வாக்குகளும், என்.ஆர்.ஐ வாக்குகள் 8-ம் தபால் வாக்குகளாக பதிவாகின.
காலை 8.00 : கர்நாடகாவில் தேர்தல் நடைபெற்ற 222 தொகுதிகளிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
காலை 7.45: காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் சித்தராமையா, பிற்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். இவர் மீண்டும் முதல்வர் ஆனால் 1985-க்கு பிறகு அடுத்தடுத்து முதல்வர் ஆன பெருமையை பெறுவார். பதாமி, சாமுண்டீஸ்வரி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் சித்தராமையா, 2 தொகுதிகளிலும் ஜெயிக்கும் நம்பிக்கையில் இருக்கிறார்.
கடந்த 5 ஆண்டுகள் ஆட்சி மூலமாக கர்நாடகாவில் பிற்பட்ட சமூகத்தினர், சிறுபான்மையினர் மத்தியில் சித்தராமையாவுக்கு செல்வாக்கு பெருகியிருக்கிறது.
காலை 7.30 : கர்நாடகாவில் பாஜக முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் பி.எஸ்.எடியூரப்பா, அந்தக் கட்சியின் ‘அதீத மதச்சார்பற்ற’ தலைவராக பார்க்கப்படுகிறார். வழக்கமாக பாஜக.வின் வாக்கு வங்கி அணி திரட்டுதலை இவர் செய்வதில்லை என தீவிர இந்துத்வா அமைப்புகளே கூறுவதுண்டு. 2008 முதல் 2011 வரை இவர் கர்நாடக முதல்வராக இருந்த காலகட்டத்தில் சமூகத் திட்டங்கள் மூலமாக மைனாரிட்டி மற்றும் இதர சமூக மக்கள் மத்தியிலும் இவர் பேசப்பட்டார்.
காலை 6.45 : கர்நாடகா தேர்தலில் மொத்தமாக 72.15 சதவிகித வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்பின் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Poll) பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டைம்ஸ் நவ் – விஎம்ஆர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவில், 90 – 103 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் எனவும், பாஜக 80 – 93 இடங்களையும், ஜேடிஎஸ் 2 – 4 இடங்களையும் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கட்சி 106 – 118 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 79- 92 இடங்களை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நாளில் நடந்தவை இங்கே : கர்நாடகா தேர்தல் 2018 : மோடியின் கோவில் விசிட்டை குறை கூறிய காங்கிரஸ்!
அதேசமயம், ரிபப்ளிக் டிவி வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் பாஜக 95 – 114 இடங்களையும், காங்கிரஸ் 32- 43 இடங்களையும், ஜேடிஎஸ் 2-3 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏபிபி (ABP) வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 97 – 109 இடங்களையும், காங்கிரஸ் 87 – 99 இடங்களையும், ஜேடிஎஸ் 21 – 30 இடங்களையும் கைப்பற்றும் என குறிப்பிடப்பட்டுள்ளது. Newsx-CNX வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவில், பாஜக 102-106 இடங்களை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் 72 – 75 இடங்களை கைப்பற்றும் என்றும், ஜேடிஎஸ் 35 – 38 இடங்களை கைப்பற்றும் எனவும், 3-6 இடங்கள் மற்றவர்களுக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கர்நாடக மாநிலத்தில் தொங்கு சட்டமன்றம் அமைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே தகவல்கள் வெளியாகின.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.