scorecardresearch

கர்நாடகாவில் வெள்ளிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு : குமாரசாமி அரசுக்கு இரட்டை பரீட்சை

கர்நாடகா நம்பிக்கை வாக்கெடுப்பு, குமாரசாமி அரசுக்கு முதல் பரீட்சை ஆகியிருக்கிறது. வெள்ளிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பும், சபாநாயகர் தேர்வும் நடக்கிறது.

Karnataka Elections 2018, Kumaraswamy trust vote
Karnataka Elections 2018, Kumaraswamy trust vote

கர்நாடகா நம்பிக்கை வாக்கெடுப்பு, குமாரசாமி அரசுக்கு முதல் பரீட்சை ஆகியிருக்கிறது. வெள்ளிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பும், சபாநாயகர் தேர்வும் நடக்கிறது.

கர்நாடகா நம்பிக்கை வாக்கெடுப்பு மீண்டும் தேசிய கவனம் பெற்றிருக்கிறது. கடந்த புதன்கிழமை (மே 23) முதல்வர் பதவியேற்ற குமாரசாமி, மாநில சட்டமன்றத்தில் வெள்ளிக்கிழமை (மே 25) நம்பிக்கை வாக்கு கோருகிறார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 78 பேர், மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் 37, சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் என மொத்தம் 117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக குமாரசாமி தரப்பு கூறி வருகிறது.

கர்நாடகாவில் எம்.எல்.ஏ.க்களை விடுவித்தால், இப்போதும் எங்களால் ஆட்சி அமைக்க முடியும் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியிருந்தார். எனவே காங்கிரஸ் எம்.எ.ஏ.க்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களையும் பெங்களூரு புறநகர் பகுதியில் தனித்தனி நட்சத்திர ஹோட்டல்களில் வைத்து பராமரித்து வருகிறார்கள்.

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் 9-வது நாளாக தங்கள் குடும்பத்தை பிரிந்து தனியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. எனினும் மொபைல் போனில் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் குடும்பத்தினருடன் பேசி வருவதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு முடியும் வரை அவர்கள் ஹோட்டல்களில் தங்கியிருப்பார்கள் என்றும் காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.

நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்ததும், வெள்ளிக்கிழமை மதியம் 12.15 மணிக்கு சபாநாயகர் தேர்வு நடைபெற இருக்கிறது. இதில் காங்கிரஸ்-ஜனதா தளம்-எஸ் கட்சியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ்குமார் களம் இறக்கப்பட்டிருக்கிறார். அதே 104 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே வைத்திருக்கும் பாஜக.வும் கட்சி சீனியரான சுரேஷ்குமாரை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது.

காங்கிரஸ், ஜனதா தளம்-எஸ் கட்சிகளில் இருந்து சில எம்.எல்.ஏ.க்கள் தங்களை ஆதரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதியே சபாநாயகர் தேர்தல் வேட்பாளரை நிறுத்துகிறது காங்கிரஸ். எனினும் காங்கிரஸ்-ஜனதா தளம்-எஸ் கூட்டணி அமைச்சரவை பட்டியலை இறுதி செய்யும் வரை வெளிப்படையான பிளவுகள் எதுவும் அங்கு நடைபெறாது என நம்பப்படுகிறது.

எனவே குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறவும், காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ்குமார் சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெறவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே தகவல்கள் வருகின்றன.

 

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Karnataka elections 2018 kumaraswamy trust vote