கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கு வாக்குப்பதிவுகள் இன்று(12.5.18) நடைப்பெற்று வருகின்றன. இதில் பெண் வாக்காளர்களை கவரும் வகையில் வாக்குசாவடிகள் மட்டும் பிங்க் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், தேர்தல் பணியில் ஈடுப்பட்டிருக்கும் பெண் அதிகாரிகளும் பிங்க் நிறத்தில் சேலை மற்றும் சுடிதார்களை அணிந்திருந்தனர். முதன்முதலில் இந்த திட்டம், கோவா மற்றும் குஜராத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. ஓட்டு சாவடிக்கு வரும் இளம்பெண்கள் மற்றும் முதன்முறை வாக்களிக்கும் பெண் வாக்களார்கள் ஆகியோர் திரும்பிய திசையெல்லாம் பிங்க் நிறத்தைக் கண்டு ஆச்சரியமாக பார்த்தனர். இந்த வரவேற்பை தொடர்ந்து தற்போது கர்நாடக சட்டப்பேரவை தேர்தலிலும் இந்த யுக்தியை பயன்படுத்தியுள்ளனர்.
பிங்க் நிற வாக்குசாவடிகளில் மேஜை துணி உட்பட அனைத்தும் பிங்க் நிறத்திலேயே இடம் பெற்றுள்ளன.பெண் வாக்காளர்களை கவர தேர்தல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட அனைவரும் பிங்க் நிற சீருடை அணிந்துள்ளனர்.
மேலும், பிங்க் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் முழுக்க முழுக்க பெண்களே தேர்தல் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த வாக்குசாவடிக்கு சஹி என பெயரிடப்பட்டுள்ளது. இங்கு பெண்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். வாக்கு சாப்வடிகளில் கூட அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்பதற்காக இந்த முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.