கர்நாடகாவில் இந்துத்துவாவிற்கு எதிராகச் செய்திகள் பதிவு செய்து வந்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்திற்கு பிறகு, நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜக மற்றும் இந்து அமைப்புகளுக்கு எதிராகப் பல கேள்விகளை எழுப்பி வருகிறார். இதனை அடித்தளமாகக் கொண்டு இவர் தொடங்கியுள்ள இந்த அமைப்பில் பலரும் பங்கெடுத்துக்கொள்வதாக அவர் கூறுகிறார்.
கர்நாடக தேர்தல் நெருங்கியுள்ள இந்த வேளையில் பிரகாஷ் ‘ஜஸ்ட் ஆஸ்கிங்’ அமைப்பிற்கு நபர்களைச் சேர்ப்பதன் செயல்பாட்டில் இறங்கியுள்ளது. கர்நாடகாவில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜக-வுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது என்று அம்மாநிலம் முழுவதும் மக்களைச் சந்தித்து பேசுகிறார்.
இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்தியேக பேட்டியில், பாஜக-விற்கு ஏன் வாக்களிக்கக் கூடாது; பாலிவுட் இவருக்கு ஏன் வாய்ப்பளிக்க மறுக்கிறது என்ற விளக்கங்களை அளித்துள்ளார்.
கேள்வி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான கருத்துகளை நீங்கள் பதிவு செய்து வருகிறீர்கள். இதில் நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டீர்களா?
பதில்: நான் இப்போது மக்களின் மத்தியில் ஒருவனாக உணர்கிறேன். ஏனென்றால், முன்பு அடித்தட்டு மக்களுடன் ஒன்றிணையக் கடினமாக இருந்தது ஆனால் இப்போது மாநிலம் முழுவதும் பயணம் செய்து அவர்களுடன் பேசி வருகிறேன். இதனால், மக்களின் என்னிடம் தானாக முன்வந்து பேசுகின்றனர். அதில் பலர், “நாட்டின் நன்மைக்காக நீங்கள் குரல் கொடுப்பது எங்களை ஈர்த்துள்ளது . இது மகிழ்ச்சியும் அளிக்கிறது.” என்று கூறுகிறார்கள். இது போன்ற மக்களின் ஆதரவால் நான் எங்கேயும் எப்போதும் தனிமையாக உணரவில்லை.
கேள்வி: கௌரி லங்கேஷ்-ஐ தனியாக போராடவிட்டது தவறு என்று நீங்கள் கூறியிருந்தீர்கள். இப்போது இந்த ஜஸ்ட் ஆஸ்கிங் அமைப்பிற்காக உங்களுக்குக் கணிசமான ஆதரவு கிடைக்கிறது என்று நினைக்கிறீர்களா?
பதில்: இதில் நான் எதிர்பார்த்ததை விட அதிகமான ஆதரவே எனக்குக் கிடைத்துள்ளது. நான் இதை இப்படிதான் பார்க்கிறேன். ஜஸ்ட் ஆஸ்கிங் அமைப்பில் தற்போது அதிக மக்கள் இணைகிறார்கள். மேலும் அடுத்த 5-10 வருடங்களில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்று அறிய வேண்டும். நான் ஒரு அரசியல் கட்சியை சேர்ந்தவர் இல்லை என்பதில் மக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
சில நேரங்களில் என்னால் அவர்களுக்கு அதிக பலம் கூடுவதாக மக்கள் கூறுகிறார்கள். அதை நீங்கள் இப்போது இந்த மாற்றத்தைக் கண்கூடாக பார்க்கலாம். ஜஸ்ட் ஆஸ்கிங் என்ற ஹாஷ்டேகை மக்கள் சமூக வலைத்தளங்களில் அதிக உபயோகிக்கிறார்கள். மக்களும் நாட்டின் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க விரும்புவது அவர்கள் எனக்கு ஆதரவு அளிப்பதில் இருந்தே தெரிகிறது.
கேள்வி: கௌரி லங்கேஷ் மரணத்திற்குப் பிறகு மக்கள் அதிகம் குரல் கொடுக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?
பதில்: இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கௌரி இப்போது நம்முடன் இல்லை. இனி மற்றொரு கௌரியை இழக்கவும் விரும்பவில்லை. அதில் நான் உறுதியாக உள்ளேன். கௌரியைச் சுட்டுக்கொன்றவர்கள் நிச்சயம் பிடிபடுவார்கள்.
சரி. ஆனால் இந்தக் கொலைக்கான தூண்டுதல் யார்? எதனால் இந்தப் பதற்றமான சூழல் உருவானது? இப்போது நாட்டு மக்களிடையே ஒரு கௌரியின் கொலை பற்றி தெரிந்துள்ளதால் நிச்சயம் மற்றொரு கௌரி கொலை நடக்காது. அனைவரும் இது பற்றி பேசத் துவங்கிவிட்டார்கள். இதுவே இந்த அமைப்பின் சாதனையாக நான் பார்க்கிறேன்.
கேள்வி: தேசிய அரசில் கர்நாடக அரசியலின் தாக்கத்தை நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
பதில்: தேசிய அரசியலில் இது ஒரு முக்கியமான தேர்தல். இந்தத் தேர்தலுக்காக பிரதமர் மோடி என்னென்ன பொய்யான வாக்குறுதிகளை அளித்தாரோ அவை எல்லாமே அரசியல் ஆதாயம் தான். குஜராத் தொகுதியில் வெற்றிபெற்று நாட்டிற்கே பிரதமர் ஆன நிலையிலும் மோடி வெறும் 99 இடங்களில் மட்டும் வெற்றிபெற்றால் போதும் என்ற நிலைக்கு ஆளாகியுள்ளார்.
உத்திரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருந்தபோதே இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலுமே தோல்வியடைந்தார்கள். திரிபுரா வெற்றி பற்றி அவர்கள் நிச்சயம் பேசுவார்கள். ஆனால் திரிபுரா வெற்றி வேறு காரணம். 25 ஆண்டுகளாக திரிபுராவில் ஆட்சி சரியாக நடைபெறவில்லை அதனால் தான் பாஜக வெற்றிபெற்றது.
எனவே திரிபுராவில் பாஜக ஒரு மாற்று அரசியல் வெற்றி தான். ஆனால் மற்ற மாநிலங்களில் இந்த நிலை இல்லை. தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் பாஜக-வுக்கு எதிராக எழும் எதிர்ப்புகள் அனைத்து அவர்கள் அளித்த பொய் வாக்குறுதியினால் தான். கர்நாடகாவும் அதே பதிலடியை தர வேண்டும்.
கேள்வி: கடந்த சில வருடங்களாக இந்தியா தனது வலிமையை இழந்துவிட்டதா? அது உங்களை அச்சுறுத்துகிறதா?
பதில்: இல்லை. இது என்னை அச்சுறுத்தவில்லை ஆனால் கோபத்தை அளிக்கிறது. இந்தக் கோபம் எதிர்த்துப் போராட வைக்கிறது. மக்கள் விழித்துக்கொண்டார்கள். இந்த எழுச்சி நல்லது. நாட்டில் அநீதிகள் நிகழும்போதெல்லாம் கலைஞர்கள் அதற்காகக் குரல் கொடுக்கிறார்கள்.
அவர்கள் கவிஞர்கள், சிற்ப கலைஞர்கள், எழுத்தாளர்கள், இயக்குனர்கள் அல்லது நடிகர்களாகவும் இருக்கலாம். கலை என்பதே சமூகத்திற்காக உருவான ஒன்று தான். அதில் நானும் அடக்கம்.