கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 10-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அங்கு
தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி இன்று (மே 2) தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, கர்நாடக மாநில தலைவர் டிகே சிவக்குமார், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா ஆகியோர் பெங்களூரு ஷங்கரிலா ஹோட்டலில் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மற்றும் சிறுபான்மை சமூகங்களான லிங்காயத் மற்றும் வொக்கலிகாக்களுக்கான இடஒதுக்கீட்டு உச்சவரம்பை 50% லிருந்து 75% ஆக உயர்த்துவது, பெண்களுக்கு மாதம் ரூ 2000, இலவச பேருந்து வசதி, மதம், சாதியின் அடிப்படையில் வெறுப்புணர்வை பரப்பும் குழுக்கள் மீது வலுவான சட்ட நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஹைலைட்ஸ்
- எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மற்றும் சிறுபான்மை சமூகங்களான லிங்காயத் மற்றும் வொக்கலிகாகாக்கள் ஆகியோரின் நம்பிக்கையைப் பெறும் வகையில் இடஒதுக்கீடு உச்சவரம்பை 50% லிருந்து 75% ஆக உயர்த்தவும், எஸ்சி மற்றும் எஸ்டிகளுக்கான இடஒதுக்கீட்டை 15-ல் இருந்து 17 சதவீதமாக உயர்த்தவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினரின் 4 சதவீத இட ஒதுக்கீடு மீட்டெடுக்கப்படும். லிங்காயத்துகள், வொக்கலிகாக்கள் மற்றும் பிற சமூகங்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்.
2. மதம் அல்லது சாதியின் அடிப்படையில் வெறுப்புணர்வை பரப்பும் குழுக்களுக்கு எதிராக தடை விதிப்பது உட்பட வலுவான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அது பஜ்ரங்தள், பி.எப்.ஐ போன்ற குழுக்களாக இருக்கலாம்.
3. கர்நாடக விசில்ப்ளோவர் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றப்படும்.
4. ஒரு வருடத்திற்குள் காலியாக உள்ள அனைத்து அரசுப் பணியிடங்களும் நிரப்படும். 2006 முதல் ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.
5. பொதுப்பணித் துறையில் ஊழல் ஒழிக்கப்படும், பொதுப்பணித் துறை, நீர்ப்பாசனம், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் வெளிப்படையான டெண்டர் முறைகளை உருவாக்கப்படும். ஊழல் குற்றவாளிகளை தண்டிக்க சிறப்பு சட்டம் இயற்றப்படும்.
6. நந்தினி பால் உற்பத்தி மேம்படுத்தப்படும். மிஷன் க்ஷீரா கிராந்தி திட்டத்தின் கீழ் கீழ் மாநிலத்தில் பால் உற்பத்தியை 1.5 லட்சம் லிட்டராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
7. மேலும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 2 ஆயிரம் வழங்கப்படும். மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் உள்ளிட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“