கர்நாடக நம்பிக்கை வாக்கெடுப்பு: ஜனார்த்தன் ரெட்டி பேரம் பேசுவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு! பேர ஆடியோ வெளியீடு!

எங்களுடன் சமரசம் செய்து கொண்டால் நீங்கள் அமைச்சராகலாம்

கர்நாடகாவில் மே 19-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடியூரப்பா அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மூத்த உறுப்பினரை தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

கர்நாடகா சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ.வான கே.ஜி.போப்பையாவை நியமனம் செய்து இன்று (மே 18) பிற்பகலில் ஆளுனர் வாஜூபாய் வாலா உத்தரவு பிறப்பித்தார். காங்கிரஸ் தரப்பில் சித்தராமையா அமைச்சரவையில் இடம் பெற்றவரான ஆர்.வி.தேஷ்பாண்டேவை தற்காலிக சபாநாயகராக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஆளுனர் ஏற்கவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. பணம், அமைச்சர் பதவி தருவதாக ராய்சூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.விற்கு ஜனார்த்தன் ரெட்டி ஆசைவார்த்தை கூறியதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான ஆடியோவை செய்தியாளர்கள் சந்திப்பின் போது காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

அதில், “எங்களுடன் சமரசம் செய்து கொண்டால் நீங்கள் அமைச்சராகலாம். கட்சியின் மேலிடத்துடன் பேசும் வாய்ப்பை உங்களுக்கு ஏற்படுத்தி தர நான் உறுதியளிக்கிறேன். அவர்கள் இந்த நாட்டை ஆளுகிறார்கள். உங்களுக்கு எவ்வளவு பணம் தேவையோ கேளுங்கள், கொடுக்கப்படும். 100 மடங்கு உங்களுடைய வளர்ச்சி உறுதி” என ஜெனார்த்தன ரெட்டி பேசியதாக ஆடியோ வெளியிடப்பட்டு உள்ளது.

நாளை பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில், இந்த ஆடியோ வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

×Close
×Close