கர்நாடகாவில் ஆட்சி அமைக்கப் போவது யார்? என்கிற சஸ்பென்ஸ் எகிறிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் பரபரப்பாக அரங்கேறிய 10 திருப்பங்களை காணலாம்.
கர்நாடகா தேர்தல் 2018 வாக்குப்பதிவு மே 12-ம் தேதி நடைபெற்றது. மே 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் பாஜக-காங்கிரஸ் இடையே கடும் போட்டி என்கிற நிலை காணப்பட்டது. காலை 10 மணிக்கு தனி மெஜாரிட்டிக்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னணி பெற்றதும், மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் பாஜக.வுக்கு வாழ்த்துக்களை பறிமாறினர்.
கர்நாடகா தேர்தல் நிலவரம், நேற்று பிற்பகலில் அடியோடு மாறியது. பாஜக தனிப் பெரும் கட்சியாக ஜெயித்த போதும், சட்டமன்றத்தில் தனிப் பெரும்பான்மை பெறும் எண்ணிக்கையான 112-ஐ எட்ட முடியவில்லை. முழுமையாக வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் பாஜக 104, காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37, இதரக் கட்சிகள் 3 என வெற்றி எண்ணிக்கையைப் பெற்றன.
தனித்தே ஆட்சி அமைக்க முடியும் என நம்பியிருந்த பாஜக.வுக்கு இந்த ரிசல்ட், அதிர்ச்சியைக் கொடுத்தது. பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்கும் விதமாக மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு நிபந்தனையின்றி ஆதரவு கொடுப்பதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி ஆளுனர் வாஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
பாஜக தரப்பில் அந்தக் கட்சியின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா, ஆளுனரை சந்தித்து உச்ச நீதிமன்றத்தின் பழைய தீர்ப்பு விவரங்களை சுட்டிக்காட்டி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். 2-வது நாளாக இன்றும் (மே 12) கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதற்கான மல்லுக்கட்டு எடியூரப்பாவுக்கும், குமாரசாமிக்கும் தொடர்ந்தது. லேட்டஸ்ட் 10 திருப்பங்களை இங்கே காணலாம்.
1. பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடியூரப்பா, அது தொடர்பான ஆவணங்களுடன் புதன்கிழமை காலையில் ஆளுனர் வாஜூபாய் வாலாவை சந்தித்தார். தனிப்பெரும் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் தன்னை ஆட்சி அமைக்க அழைக்கும்படி 2-வது முறையாக ஆளுனரிடம் கேட்டுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடியூரப்பா, ‘உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை எடுப்பதாக’ தன்னிடம் ஆளுனர் உறுதி அளித்ததாக கூறினார்.
2.பெங்களூருவில் மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மொத்தமுள்ள 78 எம்.எல்.ஏ.க்களில் 66 பேர் மட்டுமே கலந்துகொண்டதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களை விலை பேசும் குதிரை பேரம் ஆரம்பித்துவிட்டதாக சர்ச்சை கிளம்பியது.
3. பெங்களூருவில் நடைபெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் ராஜா வெங்கடப்பா நாயகா, வெங்கட ராவ் நாடகோட் ஆகிய 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகின.
4. ஜனதா தளம் (எஸ்) தலைவர் குமாரசாமி செய்தியாளர்களை சந்தித்து, ‘பாஜக எனக்கு ஆதரவு அளிப்பதாக கூறியது. எனது எம்.எல்.ஏ.க்களுக்கு 100 கோடி ரூபாய் வரை விலை பேசியிருக்கிறது’ என குறிப்பிட்டார்.
5. குஷ்டகி தொகுதியில் ஜெயித்த காங்கிரஸ் கட்சியின் அமர்கவுடா லிங்கநாகவுடா பட்டீல் பய்யபூர் Congress’ Amaregouda Linganagouda Patil Bayyapur, who won the election from Kushtagi, தன்னை பாஜக தரப்பிலிருந்து அணுகி அணி மாறும்படி கேட்டதாக கூறினார்.
6. பாஜக.வின் மத்திய பார்வையாளர்களான ஜே.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர் மற்றும் கர்நாடகா பொறுப்பாளர் முரளிதர்ராவ் ஆகியோர் செவ்வாய் கிழமை பெங்களூரு வந்தவர்கள் இங்குள்ள நிலவரங்களை அறிந்துகொண்டு டெல்லி சென்றனர்.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து நிலவரங்களை விளக்கிய அவர்கள், மீண்டும் பெங்களூரு வந்து முகாமிட்டார்கள்.
7. கர்நாடகா தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ட்விட்டரில் கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ‘கர்நாடகாவின் வளர்ச்சிப் பாதையை கொடூர நிலைக்கு கொண்டு செல்ல பாஜக அனுமதிக்காது என கர்நாடகா மக்களுக்கு நான் உறுதி கூற விரும்புகிறேன்’ என்றார். இதன் மூலமாக கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பாஜக தவற விடாது என பிரதமர் உணர்த்துவதாக கருதப்படுகிறது.
8.சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்ற 18 அமைச்சர்கள் தோற்றதையும், சித்தராமையாவே போட்டியிட்ட இரண்டில் ஒரு தொகுதியில் (சாமுண்டீஸ்வரி) பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதையும் பெரும் பின்னடைவாக காங்கிரஸ் கருதுகிறது.
9. ஓராண்டுக்கு முன்பு மணிப்பூர், கோவா தேர்தல்களில் பாஜக தனிப்பெரும் கட்சியாக ஜெயிக்காமலேயே ஆட்சி அமைத்தது. இப்போது கர்நாடகாவில் காங்கிரஸும், மஜத.வும் இணைந்து ஜனநாயகப் படுகொலை செய்வதாக பாஜக கூறுவதைப் போலவே அப்போது காங்கிரஸ் கதறியது குறிப்பிடத்தக்கது.
10. கடற்கரையோர கர்நாடகாவில் மொத்தமுள்ள 19 தொகுதிகளில் 16 தொகுதிகளை பாஜக கைப்பற்றியிருக்கிறது. கடந்த 2013-ல் இங்கு 4 இடங்களை மட்டுமே பாஜக வென்றது. கர்நாடகா-மும்பை எல்லையோர தொகுதிகளில் மொத்தமுள்ள 50-ல் 30 தொகுதிகளை பாஜக வென்றிருக்கிறது. கடந்த 2013-ல் இங்கு 13 தொகுதிகளை பாஜக பெற்றிருந்தது.