கர்நாடக உயர் நீதிமன்ற ஹிஜாப் தடை உத்தரவுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு இன்று (அக்டோபர் 13) தீர்ப்பு வழங்கியது. இதில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுகளை நீதிபதி ஹேமந்த் குப்தா தள்ளுபடி செய்தார். அதேவேளையில் நீதிபதி சுதன்ஷு துலியா, இதில் மாறுப்பட்ட பார்வை இருப்பதாக கூறி, கர்நாடக அரசின் ஹிஜாப் தடை அரசாணையை ரத்து செய்வதாக கூறினார்.
இதையடுத்து, வழக்கு சரியான வழிகாட்டுதலுக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித்-க்கு மாற்றப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் அரசு பி.யூ கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்தடுத்த கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாநில முழுவதும் இரு தரப்பு மாணவர்களிடையே போராட்டம் வெடித்தது.
கர்நாடக அரசு கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வர தடை விதித்து அரசாணை வெளியிட்டது. இதையடுத்து, உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மாணவிகளின் மனுவை விசாரித்த நீதிமன்றம், இஸ்லாமியத்தில் ஹிஜாப் அணிவது கட்டாயம் இல்லை என்றும் கர்நாடக அரசின் ஹிஜாப் தடை உத்தரவு செல்லும் எனவும் தீர்ப்பளித்தது. இதையடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். மனு உச்ச நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டதையடுத்து, விசாரணை நடைபெற்றது.
உச்ச நீதிமன்றத்தில் கடந்த 22ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்நிலையில், இன்று நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதன்ஷு துலியா அமர்வு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கினர்.
நீதிபதி ஹேமந்த் குப்தா கூறுகையில், “இவ்வழக்கில் 11 கேள்விகளை முன்வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மாணவர்களின் சீருடை குறித்து கல்லூரி நிர்வாகம் முடிவு செய்ய முடியுமா? , ஹிஜாப் அணிவதற்கான கட்டுப்பாடுகள் அரசியலமைப்பின் 25 வது பிரிவை மீறுகிறதா, சட்டப்பிரிவு 25 கீழ் கூறப்படுவது என்ன?, ஹிஜாப் அணிவது அத்தியாவசிய மத நடைமுறையா, மாணவர்கள் அதை உரிமையாகப் பள்ளிக்கு அணிந்து வரலாமா, மாநில அரசின் உத்தரவு அரசியலமைப்புச் சட்டத்தின்படி கல்வி, கல்வியை மேம்படுத்துவதற்கான நியாயமான உத்தரவு தானா எனப் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது.
இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் என் கருத்துப்படி மேல்முறையீடு மனு எதிரானது, எனவே மேல்முறையீடுகளை தள்ளுபடி செய்வதாக” கூறினார்.
நீதிபதி துலியா, தனக்கு இவ்வழக்கில் மாறுபட்ட பார்வை உள்ளதாக கூறி பிப்ரவரி 5ஆம் தேதி கர்நாடக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்வதாக கூறினார். இதன் மூலம் கல்லூரி நிர்வாகம் இப்பிரச்சனையில் முடிவெடுக்கும் அதிகாரம் பெறுகிறது.
மேலும் அவர் கூறுகையில், ” நீதிமன்றம் இதில் ஒருவேளை தவறான பாதையை எடுத்துள்ளது. சட்டப்பிரிவு 19(1)(a), 25(1), படி விவரித்துக் கூறினார். இது அவர்அவர்களின் விருப்பம். இதற்கு மேல் இல்லை. இது பெண் குழந்தையின் கல்வி பற்றியது. இந்த வழக்கை முடிவு செய்யும் போது என் மனதில் முக்கியமாக இருந்தது ஒரு பெண் குழந்தையின் கல்வி பற்றியது. ஏற்கனவே கிராமப்புறங்களை சேர்ந்த பெண் குழந்தைகள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இது பொதுவான அறிவு. நாம் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துகிறோமா? என்ற கேள்வி மனதில் இருந்தது” என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil