கர்நாடகாவில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா கோயில் பிரசாதம்:
கர்நாடக மாநிலம் சுல்வாடி கிராமத்தில் அமைந்துள்ளது மாரம்மா கோயில். நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால் இக்கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜை முடிந்ததும் பக்தர்கள் அனைவருக்கும் கோயில் பிரசாதமாக ”வெஜ் புலாவ்” வழங்கப்பட்டது.
ஆனால் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் சிறிதுநேரத்தில் வாந்தி எடுத்து மயக்கமடைந்தனர்.4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுமார் 80-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மேலும் 4 பேர் உயிரிழந்ததால் தற்போதைய நிலவரப்படி பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
பிரசாதம் சாப்பிட்ட 60-க்கும் மேற்பட்ட காகங்களும் கோயிலில் இறந்து கிடந்தன. இதனால் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோயில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுத்தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தகவல் அறிந்து அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அங்கு சிகிச்சை பெற்று வரும் 72 பேரையும் சந்தித்தார். அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விபரங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பலியானவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் குமாரசாமி, அவர்களது குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவித்தார்.
பிரசாதத்தில் கலக்கப்பட்டது என்ன?
மாரம்மா கோவிலை நிர்வகிப்பதில் 2 பிரிவினருக்கு இடையே கோஷ்டி மோதல் இருந்துள்ளது. அதன் காரணமாக ஒரு கோஷ்டியினர் பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவில் விஷத்தை கலந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பிரசாதத்தில் விஷம் கலந்ததாக சந்தேகத்தின் பேரில் சுலவாடி கிராமத்தைச் சேர்ந்தசின்னப்பி, மாதேஷ் ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் நிலை மேலும் மோசம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.பாதிக்கப்பட்டவர்களில் பலர் தமிழகத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஓம்சக்தி கோவிலுக்கு மாலை அணிந்து பாதயாத்திரையாக வந்தவர்கள் என்றும் அவர்கள் மாரம்மா கோவில் வழியாக நடந்து வந்தபோது அங்கு நடைப்பெற்ற பூஜையில் கலந்துக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.