கர்நாடகாவில் உள்ள ஓலா எலக்ட்ரிக் ஷோரூமில் புதன்கிழமை மதியம் ஒருவர் கடந்த மாதம் வாங்கிய இ-ஸ்கூட்டர் குறித்த புகார் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி ஏழு இ-ஸ்கூட்டர்களை எரித்துள்ளார். கலபுரகியை சேர்ந்த முகமது நதீம் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை குறிப்பிடுகையில், சௌக் காவல் நிலைய எல்லையில் உள்ள ஷோரூமுக்கு பெட்ரோலை எடுத்துச் சென்ற நதீம், (26) அதன் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்து 7 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தீ வைத்து எரித்தார். இந்த சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
“தனது புதிய ஓலா ஸ்கூட்டர் பழுதானது குறித்து தனது புகார்களை ஊழியர்கள் நிவர்த்தி செய்யத் தவறியதால் அவர் விரக்தியடைந்தார். அவர்களுடன் வாக்குவாதம் செய்தார். அவரது கோரிக்கைக்கு அவர்கள் செவிசாய்க்காததால், அவர் ஸ்கூட்டர்களை எரித்தார்” என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
இதனிடையே, சமூக வலைதளங்களில் பலர், ஓலா-வின் மோசமான வாடிக்கையாளர் சேவையைக் குற்றம் சாட்டினர்.
இது குறித்து பொறியாளர் ரவி தேஜா தனது எக்ஸ் பக்கத்தில் எழுதுகையில், “சர்வீஸ் சென்டரை எரிப்பது இந்த பிரச்சினைக்கு சரியான தீர்வு அல்ல. இருப்பினும், ஓலா பைக்குகள் மோசமான வாடிக்கையாளர் சேவை மற்றும் நிர்வாகத்தின் அடையாளமாக மாறியுள்ளது. டயர்-2 மற்றும் டயர்-3 நகரங்களில், ஒரு காலத்தில் 60-70 ஆயிரம் மதிப்புள்ள பைக்குகளை ஓட்டியவர்கள் இப்போது இந்த எலக்ட்ரிக் பைக்குகளில் 1.2 லட்சத்துக்கும் மேல் முதலீடு செய்து, அவற்றைப் பயன்படுத்துவதில் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்.” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“