கர்நாடகா அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு முடிந்தது. முதல்வர் குமாரசாமி 11 துறைகளை கையில் வைத்துக்கொண்டார். காங்கிரஸில் அதிருப்தி நீடிக்கிறது.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைச்சரவை பதவி ஏற்றது. துணை முதல்வராக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஷ்வர் பொறுப்பேற்றார். அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடும் செய்யப்பட்டிருக்கிறது.
முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி மொத்தமுள்ள 47 துறைகளில் 11 துறைகளை கைவசம் வைத்திருக்கிறார். நிதி, மின்சாரம், நுண்ணறிவு, உள் கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட முக்கிய துறைகள் குமாரசாமி வசம் இருக்கின்றன. குமாரசாமியின் மூத்த சகோதரர் ஹெச்.டி.ரேவண்ணா பொதுப்பணித்துறை அமைச்சர் ஆகியிருக்கிறார்.
கர்நாடகா அமைச்சரவையில் மொத்தம் 34 அமைச்சர்கள்! கூட்டணி ஒப்பந்தப்படி 77 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட காங்கிரஸுக்கு 22 அமைச்சர்கள், 37 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட ம.ஜ.த. கட்சிக்கு 12 அமைச்சர்கள்! தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 16 பேர், மஜத கட்சியை சேர்ந்த 11 பேர் என மொத்தம் 27 அமைச்சர்களுக்கு மட்டும் இலாகா ஒதுக்கீடு வெள்ளிக்கிழமை நிறைவு பெற்றது.
கர்நாடகா துணை முதல்வர் பரமேஷ்வரா, உள்துறை மற்றும் பெங்களூரு மாநகர் மேம்பாடு, இளைஞர் நலன் இலாகாக்களை பெற்றார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஆர்.வி.தேஷ்பாண்டே வருவாய்த் துறையையும், டி.கே.ஷிவகுமார் நீர்ப்பாசன துறையையும், கே.ஜே.ஜார்ஜ் கனரக மற்றும் நடுத்தர தொழில் இலாகா, தகவல் தொழில்நுட்பம், உயிர் தொழில்நுட்பம் ஆகிய இலாகாக்களை பெற்றிருக்கிறார்.
தேர்தலுக்கு முன்பே மஜத.வுடன் கூட்டணியில் இருந்த பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ. என்.மகேஷ் (கொள்ளேகால் தொகுதி) ஆரம்ப மற்றும் உயர்நிலைக் கல்வி இலாகாவை பெற்றார். பாஜக.வினரால் வலை வீசப்பட்டதாக கூறப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ராஜசேகர் பட்டீல் சுரங்கத் துறையை கைப்பற்றினார்.
காங்கிரஸ் தலைவர்கள் எம்.பி.பட்டீல், ஹெச்.கே.பட்டீல், சதிஷ் ஜார்கிஹோலி, ராமலிங்க ரெட்டி ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் தனிக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். முன்னாள் நீர்ப்பாசன அமைச்சரான எம்.பி.பட்டீல் தனது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
அதிருப்தி காங்கிரஸ் தலைவரான எம்.பி.பட்டீலை வெள்ளிக்கிழமை முதல்வர் குமாரசாமி சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் பேசிய குமாரசாமி, ‘இது எனது கட்சி சம்பந்தப்பட்ட பிரச்னை கிடையாது. காங்கிரஸ் கட்சிக்குள் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் இவை. எனினும் எம்.பி.பட்டீலின் வலியை என்னால் உணர முடிகிறது. காங்கிரஸ் கட்சிக்கு தேவையான நேரங்களில் அவர் பயன்பட்டிருக்கிறார். இப்போதை தன்னை புறக்கணித்துவிட்டதாக கருதுகிறார்’ என்றார் குமாரசாமி. பட்டீலின் மனக்குறையை கவனிக்கும்படி காங்கிரஸ் கட்சிக்கு குமாரசாமி வேண்டுகோளையும் முன்வைத்தார்.
துணை முதல்வரும் மாநில காங்கிரஸ் தலைவருமான பரமேஷ்வர் கூறுகையில், ‘அமைச்சரவையில் இடம் பெறாத சில தலைவர்களுக்கு அதிருப்தி இருக்கிறது. இந்தப் பிரச்னையை சரி செய்ய முயற்சிப்போம். இன்னும் 6 இடங்கள் காலியாக இருக்கின்றன. சரியான நபர்களை அதில் நியமிப்போம்’ என்றார் அவர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.