கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த 14 அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் ரமேஷ் குமார் அதிரடியாக தகுதி நீக்கம் செய்து அறிவித்துள்ளார். இதன் மூலம், அம்மாநில சட்டப்பேரவையில் ராஜினாமா செய்த உறுப்பினர்களுடன் சேர்த்து மொத்த எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது. இதனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை 105 ஆக உள்ளது.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவந்த நிலையில், எம்.எல்.ஏ-க்கள் அரசுக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து போர்க்கொடி தூக்கினர். இதனைத் தொடர்ந்து, சில எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, கர்நாடகா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். 105 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பெரும்பான்மையை இழந்ததால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.
ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, பாஜக சார்பில் எடியூரப்பா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட எடியூரப்பாவுக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க கர்நாடகா ஆளுநர் வஜுபாய் வாலா ஜூலை 31 ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளார்.
இந்நிலையில், கர்நாடகா சட்டபேரவை சபாநாயகர் ரமேஷ் குமார், அதிருப்தி தெரிவித்த 14 எம்.எல்.ஏ-க்களை தற்போதைய சட்டமன்றம் காலாவதியாகும் 2023 ஆம் ஆண்டு வரை தகுதி நீக்கம் செய்து அறிவித்தார். இதன் மூலம், சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 208 ஆக குறைந்தது. அதனால், பாஜக சார்பில் எடியூரப்பாவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க தேவையான 105 உறுப்பினர்கள் உள்ளனர்.
தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 எம்.எல்.ஏ-க்களில், பிரதாப் கௌடா பாட்டில், பி.சி. பாட்டில், சிவராம் ஹெப்பார், எஸ்.டி.சோமசேகர், பைரதி பசவராஜ், ஆனந்த் சிங், ரோஷன் பைஜ், கே.சுதாகர், முனிரத்னா, எம்.டி.பி நாகராஜ், ஸ்ரீமந்த் பாட்டில் ஆகிய 11 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். எச்.விஸ்வநாத், நாராயன் கௌடா, கோபாலய்யா ஆகிய மூன்று பேரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதற்கு முன்னதாக, சபாநாயகர் ரமேஷ் குமார் அதிருப்தி தெரிவித்த ஆர்.ஷங்கர், ரமேஷ் ஜர்கிஹோலி, மகேஷ் குமதஹள்ளி ஆகிய மூன்று உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ரமேஷ் குமார், ”நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு பணியை நடத்தும்படி எடியூரப்பா என்னிடம் கேட்டுக்கொண்டார். ஜூலை 31 ஆம் தேதி நிதி மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. அன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒரு சபாநாயகராக தற்போதைய அரசியல் சூழலை கையாள எனக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இவையெல்லாம் என்னை மன அழுத்தக் கடலில் தள்ளி உள்ளன.” என்று கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சபாநாயகர் ரமேஷ் குமார், “நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன் பின்னர், நிதி மசோதா தாக்கல் செய்ய வேண்டும். ஆகையால், எனது ஊழியர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர். அதனால், இன்று எனது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறேன்.” என்று கூறினார்.
சபாநாயகரின் அறிவிப்பைத் தொடர்ந்து, கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் நீதிமன்றத்தை நாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.