கர்நாடகா மாநிலம், ராமநகரா மாவட்டத்தில் உயர் சாதியைச் சேந்த இளம் பெண் தலித் இளைஞரை காதலித்ததால் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண்ணின் தந்தை, உறவினர் உள்பட 3 பேர் கைது செய்யபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள ராமநகரா மாவட்டத்தில், 19 வயது இளம் பெண் தலித் இளைஞரை காதலித்ததால் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்த பெண்ணின் அவரது தந்தை, உறவினர் சகோதரர், மற்றும் ஒரு மைனர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதலில் இளம் பெண் காணவில்லை என்று வழக்குப் பதிவு செய்த போலீசார், பின்னர், இதை சாதி ஆணவக் கொலை என்று மாற்றி பதிவு செய்தனர்.
இது குறித்து மாவட்ட போலீஸார் கூறுகையில், ராமநகரா மாவட்டம், மகதி தாலுக்காவில் உள்ள பெட்டடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேமலதா (19). வொக்கலிகா சாதியைச் சேர்ந்த இவர் புனீத் என்ற தலித் இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
ஹேமலதாவின் தந்தை கிருஷ்ணப்பா, பி.காம் மாணவியான தனது மகள் ஹேமலதா காணவில்லை என்று அக்டோபர் 9ம் தேதி போலீஸில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்த அடுத்த நாள், அந்த பெண்ணின் உடல் கிருஷ்ணப்பாவின் சகோதரருக்கு சொந்தமான பண்ணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து கர்நாடகா போலிஸ் ஐ.ஜி சீமந்த் குமார் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறுகையில், “ 3 பேரும் காவல்துறையை குழப்புவதற்காக இந்த கொலையை நன்கு திட்டமிட்டு செய்துள்ளனர். அக்டோபர் 8ம் தேதி, அவர்கள் மூவரும் ஹேமலதாவைக் கொன்று, அவரது உடலை விவசாய நிலைத்தில் புதைத்தனர். அடுத்த நாள், கிருஷ்ணப்பா தனது மகள் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்துள்ளார்” என்று கூறினார்.
இருப்பினும், ஹேமலதாவின் குடும்ப உறுப்பினர்கள் புனீத் மற்றும் அவரது நண்பர்களால் அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர்.
இளம் பெண் மரணம் குறித்து, ராமநகரா எஸ்.பி கிரிஷ் கூறுகயில், “என்ன நடந்தது என்று விசாரிக்க 21 பேர் கொண்ட போலீஸ் குழுவை அமைத்துள்ளோம். அக்டோபர் 10ம் தேதி பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, குடும்பத்தினர் முன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன. ஹேமலதாவின் பெற்றோர் துக்கப்படுவதாகத் தெரியவில்லை. மகள் காணமல் போனதை புகார் அளிக்க அந்த பெண்ணின் தந்தை 24 மணி நேரம் கழித்தே காணாமல் போனதாக புகார் அளித்து பதிவு செய்துள்ளார். பின்னர், இது சாதி ஆணவக் கொலை வழக்கு என்று நாங்கள் கண்டறிந்தோம்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"