இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஓ.பி.சி இடஒதுக்கீட்டில் அவர்களின் பங்கை அதிகரிக்கும் வகையில் மாநிலத்தில் உள்ள இரண்டு பெரிய சமூகங்களான லிங்காயத், ஒக்கலிகர்களை “பிற்படுத்தப்பட்ட” பிரிவில் இருந்து வகைப்படுத்த கர்நாடக அமைச்சரவை வியாழக்கிழமை முடிவு செய்தது.
மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டை அதிகரிக்க கோரி நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி அரசுக்கு வலியுறுத்தி வந்தனர். அதன் படி 3ஏ மற்றும் 3பி பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமைச்சரவை முடிவின்படி, தற்போது 3ஏ பிரிவில் உள்ள ஒக்கலிகர் சமூகத்திற்கு 4% இடஒதுக்கீட்டுடன் புதிதாக உருவாக்கப்பட்ட 2சி பிரிவுக்கு மாற்றப்படுகிறது. பி பிரிவில் உள்ள லிங்காயத் சமூகம் 5% இடஒதுக்கீட்டுடன் புதிதாக உருவாக்கப்பட்ட 2டி பிரிவில் வகைப்படுத்தப்படுகிறது. முக்கியமாக, லிங்காயத் சமூகத்தின் துணைப்பிரிவு இல்லை என்பதை அமைச்சரவை முடிவு உறுதி செய்துள்ளது.
மேலும், இந்த மறுசீரமைப்பு மூலம் இரு சமூகங்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் முடிவு, கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் கடந்த டிசம்பர் 23-ம் தேதி முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது.
கர்நாடகாவில் தற்போது ஓபிசி பிரிவினருக்கு 32% இடஒதுக்கீடு, பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியினருக்கு முறையே 17% மற்றும் 7% இடஒதுக்கீடு உள்ளது, மொத்த ஒதுக்கீடு 56% ஆக உள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இருந்து சிலர் EWS ஒதுக்கீட்டுக்கு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஓபிசி ஒதுக்கீட்டைப் பெறுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும். மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முழு அறிக்கை, ஆய்வுக்குப் பிறகு இந்த இரு சமூகத்தினரின் இடஒதுக்கீடு வகைப்படுத்தப்படும் என்று மாநில அரசு வட்டராங்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தது.
கர்நாடகாவில் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். அதிக மக்கள்தொகை கொண்ட சமூகமாக கருதப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஒக்கலியர்கள் உள்ளனர். இந்த இரு சமூகங்களுக்கான புதிய பிரிவுகள் மற்ற இட ஒதுக்கீட்டை பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜே.சி. மதுசாமி கூறுகையில், “மாநிலத்தில் EWS இடஒதுக்கீட்டிற்கு தகுதியான மக்கள் தொகை விகிதம் 4% ஆகும். 2சி மற்றம் 2டி பிரிவுகளின் கீழ் EWS பிரிவின் மீதமுள்ள பகுதியை நாங்கள் வகைப்படுத்துவோம். கர்நாடகாவில் மத்திய அரசின் EWS இடஒதுக்கீட்டைக் கொண்டுவர அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த புதிய 2 பிரிவு ஒதுக்கீடு கல்வி மற்றும் வேலைகளில் மட்டும் பொருந்தும், அரசியல் இடஒதுக்கீடு அல்ல” என்று அவர் தெரிவித்தார்.
இந்த சமூகங்களுக்கு தற்போது ஒக்காலிகர்களுக்கு 4% மற்றும் லிங்காயத்துகளுக்கு 5% அதிகரித்து வழங்கப்படுகிறது. இருப்பினும் முழுமையான விவரம் ஆணையத்தின் ஆய்வுக்குப் பின் தெரிய வரும். மூன்று மாதங்களில் மதிப்பீடு முடிவடையும் என்று மதுசாமி தெரிவித்தார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது பிரிவின் கீழ் இடஒதுக்கீடு உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கர்நாடக அரசு மத்திய அரசிடம் மனு அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/