கர்நாடக சிங்கம் என மக்களால் அழைக்கப்படும் பெங்களூரு தெற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனர் அண்ணாமலை, அரசியல் பிரவேசம் செய்ய உள்ளதால், தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. 2011ம் ஆண்டில் கர்நாடகா ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். உடுப்பி மற்றும் சிக்மகளூரூ எஸ்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன், 2013ம் ஆண்டில், கர்காலா சப்டிவிஷனில் ஏஎஸ்பி ஆக போலீஸ் வாழ்க்கையை துவங்கியிருந்தார். நேர்மையான அதிகாரியாகவும், மக்களிடத்தே நன்மதிப்பு பெற்ற அதிகாரியாக திகழ்ந்தார். உடுப்பி எஸ்.பி பதவியிலிருந்து வரை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டபோது, அப்பகுதி மக்கள், இவரின் இடமாற்றத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் அளவிற்கு மக்களிடையே நல்ல பெயரை சம்பாதித்திருந்தார்.
இந்நிலையில், பெங்களூரு ( தெற்கு) பகுதி போலீஸ் துணை கமிஷனராக பதவி வகித்துவந்த அண்ணாமலை, இவர் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரைவில் அரசியலில் இறங்க உள்ளதாக அவரது சக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அண்ணாமலை தனது நண்பர்கள் மற்றும் நலம்விரும்பிகளுக்கு என சமூகவலைதளத்தில் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த பதவியை ராஜினாமா செய்வது குறித்து 6 மாதத்திற்கு முன்னரே முடிவு செய்துவிட்டேன். மானசரோவர் யாத்திரை சென்றபோது, வாழ்வின் திருப்பங்களை உணர்ந்தேன். என்னுடன் பயணித்த மதுகர் ஷெட்டியின் மறைவு, என்னுள் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்தியது. அப்போதுதான் இந்த சமூகத்திற்கு என்னால் முடிந்த நற்காரியங்களை செய்ய வேண்டும் என்று எண்ணிணேன். அதன்பலனாக தான் காவல்துறை பணியை துறந்து, அரசியலில் ஈடுபட தீர்மானித்தேன். உடனடியாக அரசியலில் இறங்கபோவதில்லை. சிறிதுகாலம் வீட்டில் குழந்தைகளுக்கு நல்ல தந்தையாக இருக்கப்போகிறேன். என் வீட்டில் வளர்க்கும் கால்நடைகளிடம் அன்பு செலுத்தப் போகிறேன். பின்னர் அரசியலில் இறங்கலாம் என்று தீர்மானித்துள்ளதாக அண்ணாமலை அதில் குறிப்பிட்டுள்ளார்.