கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பா.ஜ.க தலைமையிலான முந்தைய கர்நாடகா அரசு கொரோனா நிதியை கையாண்ட விதத்தில் நூற்றுக்கணக்கான கோடி முறைகேடு செய்யப்பட்டிருப்பதாகவும், பல ஆவணங்களை காணவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி’குன்ஹா தலைமையிலான ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) முதல்வர் சித்தராமையாவிடம் அறிக்கை சமர்ப்பித்தது. இந்த ஆணையம் கொரோனா தொற்று பரவலின் போது நிதியை கையாண்ட விதத்தில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து இருந்தது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: In Karnataka, special team to assess Covid ‘scam worth hundreds of crores’
இந்த நிலையில், கொரோனா முறைகேடுகள் குறித்த இடைக்கால அறிக்கையை தலைமைச் செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் (நிதி) கீழ் உள்ள அதிகாரிகள் குழுவிடம் ஒப்படைக்க கர்நாடக அமைச்சரவை நேற்று வியாழக்கிழமை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறுகையில், இடைக்கால அறிக்கை 'நூற்றுக்கணக்கான கோடி' ஊழல் நடந்திருப்பதாகக் குறிப்பிடுகிறது. கொரோனா மேலாண்மை தொடர்பான பல கோப்புகள் காணவில்லை என்றும் ஆணையம் கூறியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
"ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி’குன்ஹா தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையின்படி நூற்றுக்கணக்கான கோடி மதிப்பிலான முறைகேடு நடந்துள்ளது. காணாமல் போனதாகக் கூறப்படும் பல கோப்புகள், கோப்புகளைக் கண்காணிக்க முயற்சித்த போதிலும் அவரிடம் (நீதிபதி டி’குன்ஹா) சமர்ப்பிக்கப்படவில்லை.
அதிகாரிகள் குழு கூடுதல் ஆய்வுகளை மேற்கொண்டு, அதை மீண்டும் முதல்வர் மற்றும் அமைச்சரவையின் முன் சமர்ப்பிக்கும். மாநில அரசு இடைக்கால அறிக்கையை மாநில சட்டமன்றத்தின் அடுத்த அமர்வில் தாக்கல் செய்யலாம்" என்றும் அமைச்சர் எச்.கே.பாட்டீல் கூறியுள்ளார்.
மகதாயி திட்டம்
மகதாயி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் முடிவை தேசிய வனவிலங்கு வாரியம் ஒத்திவைத்ததையடுத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தவும், பிரதமர் நரேந்திர மோடியிடம் அனைத்துக் கட்சிக் குழுவை அழைத்துச் செல்லவும் கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
வாரியத்தின் 79 வது கூட்டத்தில், திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தை பின்னர் எடுக்க முடிவு செய்ததாக அமைச்சர் எச்.கே.பாட்டீல் கூறியுள்ளார். அதே கூட்டத்தில், கோவா மற்றும் தம்னூர் இடையே 435 ஏக்கர் வனப்பகுதி வழியாக 400 கே.வி மின்பாதை அமைக்க கோவா அரசுக்கு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நடவடிக்கை கர்நாடகாவுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கும் ஒரு பகுதியாகும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும் கோவா மின்பாதை திட்டம் குறித்து கர்நாடகா அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த திட்டத்திற்கு தேவையான வன நிலத்தின் கணிசமான பகுதி கர்நாடகாவில் உள்ளது. "அமைச்சரவை இந்த பிரச்சினையை விவாதித்தது மற்றும் தீவிர கவலைகளை வெளிப்படுத்தியது (முடிவை ஒத்திவைப்பது)" என்றும் அமைச்சர் எச்.கே.பாட்டீல் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“