கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிக்கு நேற்று(மே 10) தேர்தல் நடைபெற்றது. மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. கர்நாடகாவில் மொத்தம் 73 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், தேர்தலுக்கு முன்தினம் இரவு (மே 9) கே.ஆர்.பேட்டை தொகுதியில் வாக்காளர்களை கவரும் வகையில் பா.ஜ.க-வினர் சேலை, கோழி இறைச்சி உள்ளிட்டவைகள் கொடுக்கப்பட்ட நிலையில் அதை மறுநாள் காலை பா.ஜ.க தலைவர் வீட்டின் முன் மக்கள் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் கே.ஆர்.பேட்டை சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பாஜகவைச் சேர்ந்தவர்கள் சேலை, கோழி இறைச்சி உள்ளிட்டவைகள் இலவசமாக கொடுத்தாக தெரிகிறது. தேர்தல் நாளன்று நேற்று (புதன்கிழமை) காங்கிரஸார் இது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் பாஜக மூத்த தலைவர், முன்னாள் முதல்வர் பி.எஸ் எடியூரப்பாவின் பிறந்த இடமான புக்கனாகெரேவில் உள்ள கஞ்சிகெரே கிராம மக்கள் இலவசங்களை திருப்பிக் கொடுத்தனர்.
இதுகுறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை, ஆனால் இது குறித்து விசாரணை நடத்தப்படும். பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளின் மாவட்டத் தலைவர்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்றனர்.
கிராமத்தில் வசிப்பவர்கள் கூறுகையில், “பாஜகவினர் கோழி மற்றும் சேலைளை பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் கஞ்சிகெரே கிராமத்திற்கு கொண்டுவந்தனர். கட்சிக்கு வாக்களிக்க கோரி அதை அளித்தனர். ஆனால் மக்கள் அதை மறுத்ததால், அதை தங்கள் வீட்டு வாசலில் விட்டுச் சென்றனர்” என்றார்.
மற்றொரு நபர் கூறுகையில், “அவர்கள் (தலைவர்கள்) எங்களை இப்படி வேண்டுமானாலும் கவர்ந்திழுப்பதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிப்போம்” என்றார்.
கஞ்சிகெரே கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகேஷ் ஜி ஜே, இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், இது கிராம மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பதைக் காட்ட விரும்புகிறார்கள் என்று கூறினார்.
மேலும் கூறிய அவர், “அதிகாலை 2 மணியளவில், (பாஜக வேட்பாளர்) நாராயண கவுடாவின் ஆதரவாளர்கள் கிராமத்திற்கு வந்து வாக்காளர்களை கவர கோழி இறைச்சி, பணம் மற்றும் புடவைகளை கொடுத்தனர். கிராம மக்கள் எதையும் எடுக்க மறுத்துவிட்டனர். பின்னர், அதிகாலை 3 மணி முதல் 4 மணியளவில் கவுடாவின் ஆதரவாளர்கள் இந்த பொருட்களை வீட்டு வாசலில் வைத்து விட்டு சென்றனர். கோபத்தில், கிராம மக்கள் ‘பரிசுகளை’ உள்ளூர் பாஜக தலைவர் ஒருவரின் வீட்டின் முன் வீசி சென்றனர். சிலர் அவற்றை ஆற்றில் வீசினர். அதன் பிறகு, அனைவரும் தங்கள் விருப்பப்படி வாக்களித்தனர், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது” என்றார்.
பொருட்களை திருப்பி அளித்த மக்கள், பாஜகவிற்கு எதிராக “திக்கரா” (அவமானம்) எனக் கூறி முழக்கங்களை எழுப்பியது அக்கிருந்த கேமராவில் பதிவாகி இருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“