கார்த்தி சிதம்பரம் கைது! ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி

ஆடிட்டர் பாஸ்கர ராமன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கார்த்தி சிதம்பரம் கைது

ஐஎன்எக்ஸ் மீடியா மோசடி பண பரிவர்த்தனை புகாரில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரம் இன்று கைது செய்யப்பட்டார். லண்டனில் இருந்து சென்னை திரும்பிய அவரை விமான நிலையத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் ‘ஐஎன்எக்ஸ் மீடியா’ என்ற தொலைக்காட்சி நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்த நிறுவனம், விதிமுறைகளை மீறி ரூ.305 கோடிக்கு தனது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளது. இதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக கார்த்தி சிதம்பரம் உதவி செய்ததாகவும் இதில், கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனங்களுக்கு மொரீஷியஸ் நாட்டில் இருந்து பணம் வந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கார்த்தி சிதம்பரத்தின் மீது 5 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்தனர்.

சிபிஐ அளித்த தகவல்கள் அடிப்படையில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த மே மாதம் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா இயக்குனர்களான பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு சட்டத்திற்கு புறம்பான வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்க கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்காக கார்த்தி சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் சிபிஐ கூறியது. அதன் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை தொடர்ந்தது.

இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் முறையாக விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறி, அவரை தேடப்படும் நபராக அறிவித்து கடந்த ஆண்டு ஜூன் 16, ஜூலை 28 ஆகிய நாட்களில் 2 ‘லுக்-அவுட்’ நோட்டீஸ்களை மத்திய அரசு பிறப்பித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி எம்.துரைசாமி இந்த வழக்கை விசாரித்து, லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை விதித்தார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்தது.

தொடர்ந்து சென்னை, டெல்லியில் உள்ள ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் பல முறை சோதனை நடத்தினர். அதைத்தொடர்ந்து, இந்த வழக்கு குறித்த விசாரணைக்காக டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் ஜனவரி 18-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதற்கிடையே, சிபிஐ, அமலாக்கத் துறைகள் அரசியல் பழிவாங்கல் காரணமாக அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றன என்று கூறி ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் 100 பக்க மனுவை தாக்கல் செய்தார்

இந்த நிலையில், டென்னிஸ் போட்டி தொடர்பாக பிப்ரவரி, மார்ச்சில் பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு செல்ல அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனுதாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதால், இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் கடந்த 16ம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘பிப்ரவரி 15 முதல் 28 வரையும், மார்ச் 20 முதல் 31 வரையும் வெளிநாடு செல்ல மனுதாரர் அனுமதி கோரியுள்ளார். இதில், பிப்ரவரியில் மட்டும் அவர் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது. எந்த நாட்டுக்கு, எந்த தேதியில் செல்கிறார்? எப்போது திரும்பி வருவார்? என்பது உள்ளிட்ட பயணத் திட்ட விவரங்களை சிபிஐ அதிகாரிகளிடம் வழங்கவேண்டும்.

தனது வங்கிக் கணக்குகளை தொடர்ந்து பயன்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும். அந்த கணக்குகளை மூடக்கூடாது. மேலும், வெளிநாடு சென்றுவிட்டு, வரும் 28-ம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும்.

லுக்-அவுட் நோட்டீஸை எதிர்த்து மனுதாரர் தொடர்ந்த வழக்கு மார்ச் 12-ம் தேதி விசாரணைக்கு வருவதால், அந்த மாதத்தில் அவர் வெளிநாடு செல்ல அனுமதி வழங்குவது குறித்து இப்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது’ என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், லண்டன் சென்றிருந்த கார்த்தி சிதம்பரம் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்ட பாஸ்கர ராமன், 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

அதேபோல், தனது மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் இந்திராணி முகர்ஜியும், பீட்டர் முகர்ஜியும் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close