கார்த்தி சிதம்பரத்தின் கைதுக்கு பின்னணியாக சுட்டிக் காட்டப்படுவது இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்தான்! ப.சிதம்பரத்திற்கும் அது நெருக்கடியை உருவாக்குமா?
கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த வழக்கில் பிப்ரவரி 16-ம் தேதியே கார்த்தியின் ஆடிட்டர் பாஸ்கரராமனை அமலாக்கப் பிரிவு (இ.டி.) கைது செய்தது. தன்னையும் சிபிஐ அல்லது அமலாக்கப் பிரிவு கைது செய்யக்கூடும் என எதிர்பார்த்தே உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் கார்த்தி.
கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல விரும்பிய விவகாரத்தில் அவரை அனுமதிப்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. அதன் அடிப்படையில் 10 நாட்கள் அனுமதி கொடுத்த சென்னை உயர் நீதிமன்றம் பிப்ரவரி 28-க்குள் கார்த்தி, தாயகம் திரும்ப வேண்டும் என உத்தரவிட்டது.
கார்த்தி சிதம்பரம் நேற்று (பிப்ரவரி 28) காலையில் லண்டனில் இருந்து சென்னை வந்து இறங்கியதும் விமான நிலையத்திலேயே அவரை சிபிஐ அதிகாரிகள் மடக்கினர். டெல்லிக்கு அவரை அழைத்துச் சென்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை 15 நாட்கள் தங்கள் காவலில் ஒப்படைக்க வேண்டும் என சிபிஐ கோரியது. ஆனால் ஒரு நாள் மட்டும் சிபிஐ காவலுக்கு அனுமதித்த நீதிமன்றம், வியாழக்கிழமை (இன்று) உரிய நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்த உத்தரவிட்டது.
கார்த்தி சிதம்பரம் கைதுக்கு பிரதான ஆதாரமாக நீதிமன்றத்தில் சிபிஐ சுட்டிக்காட்டியதே இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்தான்! இந்திராணி முகர்ஜியும், அவரது கணவர் பீட்டர் முகர்ஜியும்தான் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் இயக்குனர்கள்! 2007-ம் ஆண்டு வாக்கில் இவர்கள் தங்களின் ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீடு பெறுவதற்கான முயற்சிகளில் இருந்தனர். அப்போது ப.சிதம்பரம் நிதி அமைச்சர்!
ஐ.என்.எக்ஸ். மீடியாவில் 26 சதவிகித முதலீடு பெற இவர்கள் வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்தை அணுகினர். ஆனால் வருமான வரித்துறையின் ஆட்சேபத்தை தொடர்ந்து, வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியம் சில விளக்கங்களை கேட்டது.
இந்தப் பிரச்னையில் தங்களுக்கு உதவும்படி கார்த்தி சிதம்பரத்தை ஐ.என்.எக்ஸ். மீடியா கேட்டதாகவும், அதன்பிறகு ஐ.என்.எக்ஸ். மீடியாவின் வெளிநாட்டு முதலீடுக்கு வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் கிடைத்ததாகவும் விசாரணை அமைப்புகள் கூறுகின்றன. அதுவும் 4.6 கோடி ரூபாய் மட்டும் முதலீடுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் மொரிஷியஸை சேர்ந்த 3 நிறுவனங்களிடம் இருந்து 300 கோடி ரூபாய் முதலீடு கொண்டு வரப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
இந்திராணி முகர்ஜி தற்போது தனது மகள் ஷீனா போரா கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறார். அவரிடம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பாக குற்றவியல் சட்டப்பிரிவு 164-ன் கீழ் சிபிஐ வாக்குமூலம் பெற்றிருக்கிறது. அதில், ஐ.என்.எக்ஸ். மீடியாவுக்கு ஆதரவாக வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியைப் பெற கார்த்தி சிதம்பரத்துடன் ஒரு மில்லியன் டாலர் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து கொண்டதாக கூறியிருக்கிறார் இந்திராணி.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் தொடர்புடையவர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ.யும் அமலாக்கப்பிரிவும் ஏற்கனவே சோதனைகளை நடத்தின. அப்போது கார்த்தி தொடர்புடையதும், வேறு சில வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் 7 லட்சம் டாலர் வழங்கப்பட்டதற்கான வவுச்சர்கள் கைப்பற்றப்பட்டதாக விசாரணை அமைப்புகள் கூறுகின்றன. அந்த வவுச்சர்களில் பீட்டர் முகர்ஜி கையெழுத்து போட்டிருக்கிறார்.
இது குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘இந்திராணி முகர்ஜியும், பீட்டர் முகர்ஜியும் மேற்படி வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரிய ஒப்புதலுக்காக ப.சிதம்பரத்தை டெல்லியில் அவரது வடக்கு பிளாக் அலுவலகத்தில் சந்தித்திருக்கிறார்கள். அப்போது ப.சிதம்பரம் தனது மகன் கார்த்தியின் வணிகத்திற்கு உதவும்படியும், குறிப்பிட்ட வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தொகைகளை செலுத்தும்படியும் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்தை டெல்லியில் ஹயாத் ஹோட்டலில் இருவரும் சந்தித்திருக்கிறார்கள். அப்போதுதான் ஒரு மில்லியன் டாலர் லஞ்சம் தொடர்பான ஒப்பந்தம் பேசப்பட்டிருக்கிறது. அப்போது செஸ் மேனேஜ்மெண்ட், அட்வாண்டேஜ் ஸ்ட்ரட்டஜிக் என இரு நிறுவனங்களுக்கு பணத்தை செலுத்த கார்த்தி பரிந்துரைத்திருக்கிறார். இதையெல்லாம் முகர்ஜி தம்பதியினர் வாக்குமூலமாக எங்களிடம் கூறியிருக்கிறார்கள்.’ என்கிறார்கள் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள்.
இவற்றில் அட்வாண்டேஜ் ஸ்ட்ரட்டஜிக் நிறுவனத்திற்கு 10 லட்சம் செலுத்தப்பட்டிருப்பதாகவும், அந்த நிறுவனம் கார்த்தியின் மறைமுக கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் சிபிஐ கூறுகிறது. ஐ.என்.எக்ஸ். மீடியாவால் சமர்ப்பிக்கப்பட்ட லெட்ஜர்கள் மேற்படி 10 லட்சம் ரூபாயும் வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் விளக்க நோட்டீஸுக்கு பதில் தெரிவிக்க வழங்கப்பட்ட ‘கன்சல்டேஷன்’ கட்டணமாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரிய விவகாரம் தொடர்பாக ஐ.என்.எக்ஸ். மீடியா, செஸ் மேனேஜ்மெண்ட், அஸ்ட்ராலஜி ஸ்ட்ரட்டஜிக் நிறுவனங்களுக்கு இடையிலான சுமார் 200 ‘இ மெயில்’ பரிமாற்றங்களை கைப்பற்றியிருப்பதாகவும் சிபிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரிய அனுமதிக்காக மேற்படி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட தொகைக்கான 4 ‘இன்வாய்ஸ்’களை கார்த்தியின் ஆடிட்டர் பாஸ்கரராமனின் கம்ப்யூட்டரில் இருந்து கைப்பற்றியிருப்பதாகவும் சிபிஐ கூறுகிறது.
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு தொடர்ந்து தனது குடும்பத்தினரை டார்ச்சர் செய்வதாகவும், அதனால் தனி மனித உரிமை பாதிக்கப்படுவதாகவும் ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதன்பிறகே சிபிஐ அதிரடி பாய்ச்சலில் கார்த்தியை கைது செய்திருக்கிறது.
இந்திராணியின் வாக்குமூலத்தில் ப.சிதம்பரத்தை சந்தித்ததாகவும், அவர் கேட்டுக்கொண்ட அடிப்படையில் சில நிறுவனங்களுக்கு பணம் வழங்கியதாக கூறியிருப்பதாக தெரிகிறது. இது ப.சிதம்பரத்தை குறி வைத்து சிபிஐ.யின் நகர்வுகள் இருப்பதை புலப்படுத்துகின்றன.
காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தில் முழுமையாக ப.சிதம்பரத்திற்கு ஆதரவான நிலையை எடுத்திருக்கிறது. நீரவ் மோடி உள்ளிட்ட விவகாரங்கள் வெடித்திருக்கும் சூழலில் அதை திசை திருப்ப ப.சிதம்பரத்தை மத்திய அரசு டார்கெட் செய்வதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.