வாரணாசி மற்றும் தமிழ்நாட்டின் கலாச்சாரங்களுக்கு இடையேயான பழமையான தொடர்பைக் கொண்டாடும் வகையில் மத்திய அரசால் ஒரு மாத கால நிகழ்வாக நடத்தப்படும் காசி தமிழ்ச் சங்கமம், வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் நிறைவு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜி கிசான் ரெட்டி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
சுமார் 200 பிரதிநிதிகள் கொண்ட கடைசிக் குழு சனிக்கிழமை தமிழகம் செல்கிறது. பிரதிநிதிகளின் கடைசி குழுவை தவிர, வெள்ளிக்கிழமை நிகழ்வை பொதுமக்கள் காணலாம்… அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன, ”என்று வாரணாசி மாவட்ட நீதிபதி எஸ் ராஜலிங்கம் கூறினார்.
நவம்பர் 19 அன்று பிரதமர் மோடி ஒரு மாத கால காசி தமிழ் சங்கமம் நிகழ்வை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் மாணவர்கள், அறிஞர்கள், கைவினைஞர்கள், நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் வணிகர்கள் என 12 வெவ்வேறு குழுக்கள் வாரணாசிக்கு வருகை தந்தனர். ஒவ்வொரு குழுவிலும் சுமார் 200 முதல் 250 பிரதிநிதிகள் இருந்தனர், அவர்கள் நகரம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர்ச்சியான நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
அந்தவகையில் இந்த ஒரு மாத நிகழ்வின் நிறைவு விழா பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெறுகிறது.
கைத்தறி, கைவினைப் பொருட்கள், புத்தகங்கள் மற்றும் உணவு பற்றிய கண்காட்சிகளும் வாரணாசியில் ஒரு மாதக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டன. தமிழ்நாடு மற்றும் வாரணாசி ஆகிய இரு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதில் பங்கேற்ற பிரதிநிதிகள் காசி விஸ்வநாத் தாம் மற்றும் வாரணாசியில் உள்ள முக்கிய இடங்களை பார்வையிட்டது மட்டுமல்லாமல், அயோத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இரண்டு மாநிலங்களுக்கு இடையில், கலாச்சார மரபுகளை நெருக்கமாக கொண்டு வருவது, நமது பாரம்பரியத்தைப் பற்றிய புரிதலை உருவாக்குவதும், பிராந்தியங்களுக்கிடையில் மக்களுக்கு இடையிலான பிணைப்பை ஆழமாக்குவதும் இதன் பரந்த நோக்கமாகும், என்று கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்விற்கான அதிகாரப்பூர்வ குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாக மத்திய அமைச்சர்கள் பலர் வாரணாசிக்கு வந்து கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர்.
வாரணாசிக்கு புதன்கிழமை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஜவுளி கலைக் கண்காட்சியை வியாழக்கிழமை பார்வையிட்டார். சங்கமம் நிகழ்வின் ஒரு பகுதியாக ஏற்றுமதியாளர்களுடனும் கலந்துரையாடினார். புதன்கிழமை, அவர் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சர் எல் முருகன் மற்றும் மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் ஆகியோருடன் சங்கமத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட "ஜவுளி மாநாட்டில்" பங்கேற்றார்.
கடந்த வாரம், மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் கடந்த வாரம் வாரணாசி வந்திருந்தார்.
இதற்கிடையில், பிரதமர் மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு வரும் அமித் ஷா தனது பயணத்தின் போது, பாஜக அலுவலகப் பணியாளர்களுடன் சந்திப்பை நடத்துவார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.