காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாவது எடிசன் இந்தாண்டு பிப்ரவரி 14 முதல் 25 வரை நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதன்கிழமை அறிவித்தார். மேலும், இந்தாண்டின் நிகழ்ச்சி கருப்பொருள் ரிஷி அகஸ்தியராக இருக்கும் என்றும் கூறினார்.
"எங்களைப் பொறுத்தவரை, இது எங்கள் தாய்நாட்டிற்கு நம்பிக்கை, உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு பற்றிய விஷயம். மனித நாகரிகத்தின் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ் மொழி என்று நாம் எப்போதும் கூறுகிறோம். இந்த வகையான பாரம்பரிய மதிப்பால், சமூகத்தில் மகத்தான தாக்கம் ஏற்படும்" என அமைச்சர் கூறினார்.
மத்திய கல்வி அமைச்சகம் நடத்தும் காசி தமிழ் சங்கமத்தின் முதல் எடிசன் 2022-ல் நடைபெற்றது. இது வாரணாசி மற்றும் தமிழ்நாடு இடையே இருக்கும் கலாச்சாரத்தை எடுத்துக் காட்டும் வகையில் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு மொத்தம் 1,200 பேர் பங்கேற்பாளர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் 200 பேர் மத்திய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் இருப்பர். தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், சிறுதொழில் முனைவோர், மற்றும் சுயஉதவி குழுக்களைச் சேர்ந்த பெண்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள்.
ஆன்லைன் பதிவு போர்டல் தொடங்கப்பட்டுள்ளது. காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்பவர்கள் வினாடி வினா மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். நிகழ்ச்சியின் போது கருத்தரங்குகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அதோடு தேர்வு செய்யப்படும் நபர்கள் வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு அழைத்து செல்லப்படுவார்கள். மேலும் அங்கு நடைபெற்று வரும் மகா கும்ப நிகழ்ச்சியையும் கண்டு களிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.