Kashmir: ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுகிறார் ஆளுநர் வோரா.
ஜம்மு காஷ்மீரில், கடந்த 19ம் தேதி மக்கள் ஜனநாயக கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப்பெற்றது பாஜக. இதன் மூலம் இரு கட்சிகளுக்கும் இடையே இருந்த கூட்டணி முறிந்தது.இந்த நிகழ்வுக்குப் பின்னர் காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, காஷ்மீரில் கூட்டணி முறிவின் மறுநாளான 20ம் தேதி ஆளுநர் ஆட்சிக்கு ஒப்புதல் அளித்தார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.
மேலும், ஆளுநருக்கு ஆலோசனை வழங்க முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜய்குமார் மற்றும் தலைமைச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மாநில ஆளுனர் வோரா அழைப்பு விடுத்துள்ளார்.
காஷ்மீர் மாநில பாதுகாப்பு குறித்து கலந்தாலோசிக்க, ஆளுநர் வோரா இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை இன்று கூட்டுகிறார் என ஆளுநர் மாளிகை தகவல் அளித்துள்ளது. இந்த கூட்டத்திற்கு தேசிய கட்சிகளின் மாநில தலைவர்கள் உட்பட அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய நலனுக்காகவே அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தபட உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.