/tamil-ie/media/media_files/uploads/2019/08/jk-2.jpg)
News today live updates
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயல்புநிலை, படிப்படியாக ஏற்பட்டு வருகிறது. தொலைதொடர்பு சேவைகள் படிப்படியாக வழங்கப்பட்டு வருகின்றன. பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அடுத்தவாரம் முதல் செயல்பட துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில தலைமைச்செயலாளர் பிவிஆர் சுப்ரமணியம், வெள்ளிக்கிழமை, பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்ட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஆகஸ்ட் 5ம் தேதியில் இருந்து பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவு மெல்ல மெல்ல விலக்கிக்கொள்ளப்பட்டு வருகிறது. தொலைதொடர்பு சேவைகள் படிப்படியாக வழங்கப்பட்டு வருகின்றன. தரைவழி தொடர்பு சேவைகள், இந்த வார இறுதிக்குள் வழங்கப்பட்டு விடும். பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அடுத்தவாரம் முதல் செயல்பட துவங்கும்.
அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பகுதிகளில் அமைதியான சூழ்நிலை ஏற்படுவதற்கு பாதுகாப்புப்படையினர் மட்டுமல்லாது, மக்களின் ஒத்துழைப்பும் மிக முக்கியமாக அமைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள 22 மாவட்டங்களில் 12 மாவட்டங்களில் முழுவதும் இயல்புநிலை திரும்பியுள்ளது. 5 மாவட்டங்களில், இரவுநேரங்களில் மட்டும் தடையுத்தரவு அமலில் உள்ளது.
தீவிரவாதிகள், தங்களது தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தொலைதொடர்பு சேவைகளையே அதிகளவில் நம்பியுள்ளதால், தொலைதொடர்பு சேவைகள் படிப்படியாகவே வழங்கப்பட்டு வருகின்றன. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தரைவழி தொலைபேசி சேவைகள், சனிக்கிழமை முதல் முழுவதுமாக செயல்பட துவங்கும்.
மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை என்பதாலேயே, மத்திய அரசு, காஷ்மீர் விவகாரத்தில் அதீத கவனம் செலுத்தி வருகிறது. 2008, 2012 மற்றும் 2016ம் ஆண்டில் ஏற்பட்டதுபோன்ற நிலை மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதாலேயே, தடையுத்தரவு நீக்குவதில் மத்திய அரசு இந்தளவிற்கு ஈடுபாடு காட்டிவருகிறது என்று பிவிஆர் சுப்ரமணியம் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.