Kashmiris Facing Problems : புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் படிப்பதற்காகவும், வேலைக்காகவும் சென்ற காஷ்மீர் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியது. டெஹ்ராடூன் பகுதியில் படித்துக் கொண்டிருந்த காஷ்மீர் மாணவர்கள் 12 பேரை பஜ்ராங்தாள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் 20 காஷ்மீர் மாணவிகள் ஒரு விடுதியில் தங்கி அங்கிருந்து வெளியேற மறுத்த சூழ்நிலையும் உருவானது. ஆனால் உத்தரகாண்ட் மாநில காவல்த்துறை இப்படியான வன்முறைகள் எதுவும் அரங்கேறவில்லை என்று மறுத்து ட்வீட் ஒன்றை வெளியிட்டது.
ஆனால் டெஹ்ராடூனின் பல்வேறு பகுதியில் படித்துவரும் காஷ்மீர் மாணவர்களை பஜ்ரங் தாள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிசாத் இயக்கத்தினர் தாக்கியது. மேலும் எந்த காஷ்மீர் இஸ்லாமியர்களும் இங்கு படிக்க இயலாது என்று எச்சரிக்கை செய்துள்ளது என்று சில நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின.
உதவிக்கரம் நீட்டிய நெட்டிசன்கள்
ஜம்முவில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிஹாரில், காஷ்மீர் வர்த்தகர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது என்று தொலைக்காட்சிகள் செய்திகள் ஒளிபரப்பின. காஷ்மீர் மக்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை என அறியப்பட்ட நிலையில், அம்மக்களுக்கு உதவும் வகையில் தங்களின் உதவிக் கரங்களை நீட்டியுள்ளனர் பலர்.
டெல்லியை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி மதூர் வர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தலைநகர் முழுவதிலும், குறிப்பாக சிறுபான்மையினர் அதிகம் வசிக்கின்ற பகுதிகளிலும் காவல்த்துறையினரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். இங்கு வாழும் அனைத்து மக்களின் குறிப்பாக காஷ்மீரிகளின் பாதுகாப்பினையும் உறுதி செய்வோம் என்று ட்வீட் செய்துள்ளார்.
மேலும் படிக்க : பிரிவினைவாதிகளுக்கு அளித்து வந்த பாதுகாப்பு வாபஸ்