உத்தரப் பிரதேசம் வாரணாசியில் தற்போது 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த காசி தமிழ் சங்கமம்-3, வரும் ஜனவரி 19 முதல் 28 வரை நடைபெற உள்ளது. பிரயாக்ராஜின் கும்பமேளாவை தமிழர்கள் காணும் வகையில் அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்கப்படுகிறது.
உத்தரப்பிரதேசம் வாரணாசியுடன் தமிழர்களுக்கு உள்ள கலாச்சார தொடர்பை எடுத்துரைத்து வலுப்படுத்த ‘காசி தமிழ் சங்கமம் 2022 இல் துவக்கப்பட்டது. சுமார் ஒரு மாதம் நடைபெற்ற இந்த தமிழ் சங்கமம் பிரதமர் நரேந்திர மோடி தனது மக்களவை தொகுதியான வாரணாசியில் தொடங்கி வைத்திருந்தார். இரண்டாவது சங்கமமும் வாரணாசியில் நவம்பர் 2023-ல் நடைபெற்ற நிலையில் தெலுங்கு மொழி மக்களுக்கும், குஜராத்தில் சவுராஷ்டிரா சங்கமங்களும் நடைபெற்றன.
தற்போது 2024-ல் நடைபெறவிருந்த மூன்றாவது சங்கமம் அடுத்த வருடத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வாரணாசி அருகே உள்ள பிரயாக்ராஜில்ஆண்டுதோறும் நடைபெறும் கும்பமேளா இந்த ஆண்டு 19 முதல் 28 வரை நடைபெறுகிறது. வழக்கம் போல், காசியில் இந்த சங்கமத்தையும் மத்திய கல்வித் துறையுடன் இணைந்து வாரணாசி மாவட்ட நிர்வாகம் நடத்துகிறது.
கடந்த 2 தமிழ் சங்கமங்களும் கடும் குளிர் நிலவும் நாட்களான நவம்பரில் நடைபெற்ற நிலையில் தமிழர்களின் சிரமம் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு கும்பமேளாவை இனி அனைவரும் காணும் வகையில் ஜனவரியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முழு ஏற்பாடுகள் குறித்த கானொளி கூட்டம் நவம்பர் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசின் சில துறைகளும் உதவ உள்ளதாக மத்திய கல்வித் துறை அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளது.
முதல் தமிழ்ச் சங்கம் வாரணாசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது. இரண்டாவது தமிழ்ச் சங்கமம் வாரணாசி மாவட்ட ஆட்சியரான தமிழர் எஸ்.ராஜலிங்கம் யோசனையின்படி நமோ காட் கங்கைக் கரையில் நடைபெற்றது. காசி தமிழ் சங்கம் நடைபெற்றதை தொடர்ந்து கங்கையில் புதிதாக அமைத்த இந்த நமோ காட் ஒரு சுற்றுலா தலமாக வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும் இங்கு, அன்றாடம் சுமார் ஐந்தாயிரம் பேர் வருகை தருகின்றனர்.
எனவே, மூன்றாவது சங்கமமும் நமோ காட்டிலேயே நடைபெற உள்ளதால் இந்த சங்கமத்துக்கும் தமிழகத்தின் சென்னை, மதுரை,ராமேஸ்வரம் என பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் அழைத்து வரப்பட உள்ளனர். இவர்கள் வாரணாசியுடன், அயோத்யா மற்றும் பிரயாக்ராஜுக்கும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பல்வேறு வகை பிரிவினராக தமிழர்கள் இதில் கலந்து கொள்ள உள்ள நிலையில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் பிறகு நேரில் மற்றும் இணையதளம் மூலமாக சங்கமத்துக்கான தமிழர்களை சென்னை ஐஐடி தேர்வு செய்ய உள்ளது.
இந்த சங்கமம் நிகழ்ச்சி முதன்முதலாக தொடங்கப்பட்டபோது பாஜக அரசியல் லாபத்துக்கு செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு தமிழகத்தில் ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை. இதனால், இனி ‘காசி தமிழ் சங்கமம்’ நடைபெறாது எனக் கூறப்பட்ட நிலையில் அதனை மறுக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம்-3 ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.