கொல்லப்படுவதற்கு முன்பு கோமா நிலைக்கு தள்ளப்பட்ட கத்துவா சிறுமி... தடவியல் நிபுணர்கள் அறிக்கை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொலை செய்யப்பட்டதற்கு முன்பு கோமா நிலைக்குச் சென்றுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. தடவியல் நிபுணர்கள் அளித்த அறிக்கையில் இந்த உண்மை தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலம், கத்துவா மாவட்டத்தில், கடந்த ஜனவரி மாதம் 8 வயது பிஞ்சு குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட துயர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தக் கோரச் சம்பவத்தை நிகழ்த்திய சிறார் உட்பட 8 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் காஷ்மீர் சிறுமி வன்கொடுமை வழக்கில், விசாரணை நடத்தி வந்த குற்றப்பிரிவு போலீசார் தடவியல் நிபுணர்களிடம் ஆய்வு அறிக்கை கேட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து தடவியல் நிபுணர்கள், அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கையில், கொலை செய்யப்படுவதற்கு முன்னால் சிறுமி கோமா நிலையில் இருந்த தகவல் தெரியவந்துள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள், அதிக அளவிலான மயக்க மருத்தைச் சிறுமிக்கு அளித்துள்ளதாகவும், இதனால் மயக்க நிலைக்குச் சென்ற சிறுமி பின்பு கோமா நிலையை அடைந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் கொலை செய்யப்பட்டபோது பாதிக்கப்பட்ட சிறுமி கோமாவில் இருந்ததும் அறிக்கையின் மூலம் தெரியவந்தது.

முன்னதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக வாதாடினர். அப்போது, “சிறுமி தனக்கு துன்பம் இழைக்கப்படும் போது சத்தமோ, கூச்சலோ போடாமல் இருந்திருக்க முடியுமா? அக்கம்பக்கத்தில் இருந்தவர்களின் உதவியை நாடாமல் எப்படி இருந்திருக்க முடியும்?” என்ற கேள்விகளை முன்வைத்தனர். இவ்வாறு சந்தேகங்களை எழுப்பி வந்த குற்றம்சாட்டப்பட்ட தரப்பு வழக்கறிஞர்களின் கேள்விக்கு பதிலாக அமைந்துள்ளது தடவியல் நிபுணர்கள் அளித்துள்ள அறிக்கை.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close