கார்டூனிஸ்ட் கே.கே. சுபாஷ், கேரளாவில் சிஸ்டராக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பேராயர் ஃப்ரான்கோ முல்லக்கலுக்கு எதிராக கடந்த ஆண்டு கார்டூன் ஒன்றை வெளியிட்டார். அப்போது அந்த கார்டூனுக்கு யாரும் எதிர்ப்பு கூறவில்லை.
இந்நிலையில் அந்த கார்டூனிற்கு கேரளாவின் லலிதா கலா அகாடெமி சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கேரள கத்தோலிக்க திருச்சபையை சேர்ந்தவர்கள் இந்த விருதிற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
கேரள கத்தோலிக்க பேராயர்கள் சபை (Kerala Catholic Bishops’ Council (KCBC)) செய்தி தொடர்பாளர் வர்கீஸ் வல்லிகத் இது குறித்து தெரிவிக்கையில், நடைபெற்று முடிந்த தேர்தலில் கிருத்துவர்கள் சி.பி.எம். கட்சிக்கு ஆதரவாக நிற்கவில்லை. இதனை மனதில் கொண்டு தான் இந்த விருது இப்படியான ஒரு கேலிச்சித்திரத்திற்கு தரப்பட்டுள்ளது என்று கூறினார்.
கே.கே. சுபாஷ் தெரிவிக்கையில் இந்த கேலிச்சித்தரம் வந்த போது இதனை எதிர்த்து யாரும் குரல் கொடுக்கவில்லை. அகாதெமியின் முடிவிற்கு நான் பொறுப்பில்லை. ஆனால் இந்த சித்திரம் எந்த மதத்தினரையும் புண்படுத்தும் வகையில் வரையப்படவில்லை என்று கூறியுள்ளார்.
அகாதெமியின் இயக்குநர் நேமோம் புஷ்பராஜ் கூறுகையில் மூன்று பேர் கொண்ட நடுவர் தீர்ப்பு தான் இந்த கேலிச்சித்திரத்திற்கு விருதினை வழங்கியது. அரசோ, அகாதெமியோ ஈதற்கு பொறுப்பேற்க இயலாது. விருதினை திரும்பப் பெறுவது குறித்து உறுப்பினர்களுடன் விவாதித்துவிட்டு தான் ஒரு முடிவுக்கு வர இயலும் என்று கூறியுள்ளார். ஒரு நல்ல படைப்பை பாராட்டுவதில் எங்களுக்கு எப்போதுமே தடை இருந்ததில்லை என்றூம் அவர் கூறியுள்ளார்.
ஏ.கே. பாலன் மூத்த சி.பி.எம். உறுப்பினர் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் விருது குறித்து மறுசீராய்வு செய்ய வேண்டும் லலிதா கலா அகாடெமியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.