கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சயில் கண்டுடிபிடிக்கப்பட்ட பொருட்கள் 2200 ஆண்டுக்கு முந்தையது என ராஜ்யசபாவில் கனிமொழி கேள்விக்கு மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் டாக்டர் மகேஷ் சர்மா பதிலளித்தார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் ஏராளமான பொருட்கள் கிடைத்தன. ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுக்குப் பிறகு தமிழகத்தில் கீழடியில்தான் மிகப்பெரிய தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டது. தற்பொழுது அகழாய்வு செய்யப்பட்டுவரும் இடம் 3.5 கி.மீ சுற்றளவுடன் 80 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. தொன்மையான ஊர்களான கொந்தகை, மணலூர் ஆகியவையும் இப்பகுதியோடு தொடர்ச்சியுற அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
கீழடியில் கிடைத்த பொருட்கள் கிரேக்க நாகரிகத்துக்கு முந்தயவை என சொல்லப்படுகிறது. இங்கு கிடைத்த பொருட்களை டெல்லிக்கு அனுப்பி வைக்க முயன்றனர். அதோடு அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அதிகாரியை இடமாற்றம் செய்தனர். அதோடு அகழ்வாராய்ச்சியை நிறுத்தவும் முயற்சி நடந்தது.
இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கீழடியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும். அங்கு கிடைத்தப் பொருட்களை மதுரையில் வைத்து பாதுகாக்க வேண்டும் என்ற வழக்கும் தொடரப்பட்டது. தமிழக அனைத்து கட்சியினரும் இதற்காக குரல் கொடுத்தனர். தமிழர்களின் நாகரிகத்தை மறைக்க முயற்சி நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
கீழடி அகழ்வாராய்ச்சியின் போது, ‘பத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் கண்டறியப்பட்டது. சுடுமண் குழாய், கழிவுநீர் தொகுதிகள், உறை கிணறுகள், செங்கற்சுவர்கள், மண்பாண்டங்கள் (வெளிநாட்டினருடன் வணக தொடர்பை விவரிப்பவையாக உள்ளது), தமிழ் எழுத்துக்கள், அணிகலன்கள், அரிய தொல் பொருட்கள் கிடைத்தனர்.
இந்நிலையில், கீழடியில் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் காலத்தை கண்டறிய அவை ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனவா? அப்படியானால் அதன் விபரங்களை அளிக்குமாறும், ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படவில்லையென்றால் என்ன காரணம் என்றும் தகவல் அளிக்குமாறு, திமுக மாநிலங்களவை உறுப்பினரரும் மகளிரணித் தலைவருமான கனிமொழி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அவருக்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறைக்கான இணை அமைச்சர் டாக்டர் மகேஷ் சர்மா பின்வரும் விபரங்களை தெரிவித்தார்.
கீழடியில் கண்டெடுக்கப்பட் பொருட்களில் இரண்டு மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள பீடா அனலிடிக் என்ற நிறுவனததுக்கு அனுப்பப்பட்டன. அதில் ஒரு பொருள் தற்போதைய காலத்திலிருந்து 2160 ஆண்டுகள் முற்பட்டதாக இருக்கலாம் என்றும் இரண்டாவது பொருள் 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர் என்று அமைச்சர் பதிலளித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.