Arvind Kejriwal | டெல்லி கலால் கொள்கை வழக்கில் திகார் சிறையில் உள்ள அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், வேண்டுமென்றே மாம்பழம் மற்றும் இதர உணவுப் பொருள்களை சாப்பிட்டு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை உயர்த்தி ஜாமீன் பெற முயன்றதாக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்க இயக்குனரகம் வியாழக்கிழமை குற்றம்சாட்டியுள்ளது.
சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா, முதலமைச்சர் கெஜ்ரிவால் தனது சர்க்கரை அளவைக் கண்டறிய வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் வாரத்திற்கு மூன்று முறை ஆன்லைன் மருத்துவ ஆலோசனை கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்து வந்தது.
அப்போது அமலாக்கத் துறை வழக்கறிஞர் ஜோஹெப் ஹொசைன், "நீரிழிவு நோயாளி தனது சர்க்கரை அளவை அதிகரிக்க வேண்டுமென்றே மாம்பழங்களையும் சாப்பிட்டு, மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெறுவதற்கான காரணங்களை உருவாக்குகிறார்” என்றார்.
முதல்வர் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான வக்கீல் விவேக் ஜெயின், அவர் சாப்பிடும் உணவு, மருத்துவர் பரிந்துரைத்ததே என வாதிட்டார்.
இது குறித்து அவர், “இந்த உணவுமுறை மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகிறது. அமலாக்கத் துறை டாக்டருக்கு மேலானதா? அமலாக்கத் துறை வெறும் ஊடக விளம்பரத்திற்காக அறிக்கைகளை வெளியிடுகிறது என்று ஜெயின் கூறினார்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வழக்கை பட்டியலிட்ட நீதிமன்றம் மேலும் கெஜ்ரிவாலின் மருத்துவ நிலை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு திகார் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
தற்போது ரத்து செய்யப்பட்ட டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 23 வரை டெல்லி நீதிமன்றம் திங்கள்கிழமை நீட்டித்தது.
சிறப்பு நீதிபதி காவேரி பவேஜா நீதிமன்றம் அவரை ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஏப்ரல் 1ஆம் தேதி அவர் திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
டெல்லி கலால் வரிக் கொள்கையில் மாற்றங்களுக்குப் பிறகு பெறப்பட்ட கிக்பேக்குகள் கோவா சட்டமன்றத் தேர்தலுக்கான ஆம் ஆத்மியின் பிரச்சாரத்திற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்டதாக அமலாக்கத் துறை அதன் முந்தைய ரிமாண்ட் விண்ணப்பத்தில் குற்றம் சாட்டியது. அந்த நிறுவனம் கெஜ்ரிவாலை "கிங்பின் மற்றும் முக்கிய சதிகாரர்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலத்தில் வாசிக்க ; ‘Kejriwal eating mangoes to raise sugar levels to get bail,’ ED tells court; diet prescribed by doctor, says CM’s lawyer
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“