துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை எதிர்த்து புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி போரட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மாநில ஆட்சியில் தலையிடுவதாகக் கூறி கடந்த வாரம் தர்ணாவில் ஈடுபட்ட முதல்வர், இன்று வரை தனது போராட்டத்தைத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் துணை நிலை ஆளுநரால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், காங்கிரஸோடு அதிருப்தியில் இருந்தாலும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு தனது ஆதரவைத் தெரிவிக்க, புதுச்சேரி வந்தடைந்திருக்கிறார்.
இருப்பினும் வரக்கூடிய பொதுத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைக்க கெஜ்ரிவால் விரும்புவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபோல், கடந்த ஜூன் மாதம் டெல்லி துணை நிலை ஆளுநரை எதிர்த்து தனது அமைச்சரவையுடன், தர்ணாவில் ஈடுபட்டார் முதல்வர் கெஜ்ரிவால்.
தவிர 2015 தேர்தலில், பா.ஜ.க-வின் முதல்வர் வேட்பாளராக டெல்லியில், கிரண்பேடி நிறுத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் நேற்று நேரில் பேச்சு வார்த்தை நடத்த முதல்வர் நாராயணசாமிக்கு அழைப்பு விடுத்தார் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி. ஆனால் சந்திப்பின் போது உடன் யார் யார் இருக்கலாம் என்பதில் இரு தரப்புக்கும் இருந்த சிக்கலால் நேற்று அந்த பேச்சு வார்த்தை நடக்கவில்லை.
இதனிடையே இன்று மாலை 5 மணிக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அவரது கேபினெட் அமைச்சர்களை நேரில் சந்தித்து பேச அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பை முதல்வரும் ஏற்றுக் கொண்ட நாராயணசாமி, நேற்று மாலை 6.30 மணியளவில் கிரண் பேடியை சந்தித்தார். அந்த சந்திப்பில், இலவச வேட்டி, சேலை, வழங்குதல், இலவச அரிசி வழங்குதல், மின் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட முக்கியமான விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். சுமார் நான்கு மணிநேரம் நீடித்த இந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் நாராயணசாமி தனியாக ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, ”39 கோரிக்கைகளில் முக்கிய விவகாரங்கள் குறித்து துணை நிலை ஆளுநர் கிரண் பேடியுடன் விவாதித்தோம். எங்களுடைய கோரிக்கைகளுக்கு அவரும் ஒப்புதல் அளித்துள்ளதால், கடந்த 6 நாட்களாக நடைப்பெற்று வந்த தர்ணாவை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம்” என்றார்.