Sreenivas Janyala
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் நரேந்திர மோடி 75 வயதில் "ஓய்வு பெறுவார்" என்றும், உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரதமர் ஆவார் என்றும் கூறிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, மோடி "முழுமையான பதவிக்காலத்தை முடிப்பார்" என்று அமித் ஷா வலியுறுத்தினார்.
ஆங்கிலத்தில் படிக்க: Kejriwal needn’t feel happy about Modi turning 75, he will finish his term: Amit Shah
ஹைதராபாத் பா.ஜ.க அலுவலகத்தில் பேசிய அமித் ஷா, “நரேந்திர மோடிக்கு 75 வயதாகிறது என்று மகிழ்ச்சியடையத் தேவையில்லை, என அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது சகாக்கள் மற்றும் இந்தியா கூட்டணியிடம் நான் கூற விரும்புகிறேன். பா.ஜ.க.,வின் அரசியல் சாசனத்தில் அப்படி எதுவும் குறிப்பிடப்படவில்லை. மோடி ஜி இந்த பதவிக் காலத்தை முடிக்கப் போகிறார், மேலும் மோடி ஜி எதிர்காலத்திலும் நாட்டை வழிநடத்துவார். பா.ஜ.க,விற்குள் குழப்பம் இல்லை; அவர்கள் குழப்பத்தை உருவாக்க விரும்புகிறார்கள்,” என்று கூறினார்.
பின்னர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அமித் ஷா, “நாங்கள் 400 இடங்களைக் கடக்கப் போகிறோம், மோடி ஜி மூன்றாவது முறையாக பிரதமராக வருவார் என்று இந்தியா கூட்டணித் தலைவர்களுக்குத் தெரியும், அதனால்தான் அவர்கள் இதுபோன்ற தவறான கருத்துக்களை பரப்புகிறார்கள். பாரதிய ஜனதாவின் அரசியல் சாசனத்தில் அப்படியொரு ஏற்பாடு இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மோடி ஜி 2029 வரை தலைமை தாங்குவார், வரவிருக்கும் தேர்தல்களுக்கு மோடி ஜி தலைமை தாங்குவார். இந்திய கூட்டணிக்கு எந்த நல்ல செய்தியும் இல்லை,” என்று கூறினார்.
டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “இந்த மக்கள் (பா.ஜ.க) இந்திய கூட்டணியைக் கேட்கிறார்கள், உங்கள் பிரதமராக யார் வரப்போகிறார்கள்? உங்கள் பிரதமர் வேட்பாளர் யார்? நான் பா.ஜ.க.,விடம் கேட்கிறேன், உங்கள் பிரதமர் யார்? வரும் செப்டம்பரில் அவருக்கு (மோடி) 75 வயதாகிறது. 75 வயது நிரம்பிய கட்சிக்காரர்கள் ஓய்வு பெற வேண்டும் என்ற விதியை வகுத்தவர் மோடி. அவர் அடுத்த ஆண்டு ஓய்வு பெற வேண்டும். எனவே நான் பா.ஜ.க.,விடம் கேட்கிறேன், உங்கள் பிரதமர் யார்? மோடியின் உத்தரவாதத்தை நிறைவேற்றுவது யார்? அமித்ஷா செய்வாரா? நீங்கள் வாக்களிக்கச் செல்லும்போது, நீங்கள் அமித் ஷாவுக்கு வாக்களிக்கிறீர்கள், மோடிக்கு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்,” என்று கூறினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, “நரேந்திர மோடிக்கு முதல்வராகவும், பிரதமராகவும் 23 வருட அனுபவம் உள்ளது, அவர் நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்துள்ளார்” என்று அமித் ஷா கூறினார். “ஏழைகளின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தவர். இன்று, உள்நாட்டு பாதுகாப்பு மேம்பட்டுள்ளது; பயங்கரவாதம் மற்றும் நக்சலைட்டுகள் மீது எங்களுக்கு இறுக்கமான பிடி உள்ளது. ஒருபுறம் ஏழைப் பின்னணியில் இருந்து வந்த பிரதமர், டீ விற்பவர் இருக்கிறார், மறுபுறம் வாரிசு அரசியலின் தயாரிப்புகளான வெள்ளிக் கரண்டியை வாயில் வைத்துக் கொண்டு பிறந்த தலைவர்கள் உள்ளனர்,'' என்று அமித் ஷா கூறினார்.
மேலும், கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீன், அவர் தூய்மையானவர் என்று அர்த்தம் அல்ல என்றும் அமித் ஷா கூறினார். “தேர்தல் பிரச்சாரத்திற்காக மட்டுமே கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. ஜூன் 2-ம் தேதி அவர் விசாரணை முகமை முன்பு சரணடைய வேண்டும். இது உச்சநீதிமன்றம் தனக்கு குற்றமற்றவர் சான்று வழங்குவதாக கெஜ்ரிவால் நினைத்தால், சட்டத்தைப் பற்றிய அவரது புரிதல் தவறு என்று நான் நினைக்கிறேன்,” என்று அமித் ஷா கூறினார்.
பாகிஸ்தான் அணுசக்தி உள்ள நாடு என்ற மணிசங்கர் அய்யரின் கருத்துக்கு, “பா.ஜ.க.,வின் நிலைப்பாடு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது, அது இந்தியாவின் ஒரு பகுதி. பாகிஸ்தானிடம் அணுகுண்டுகள் உள்ளன என்ற அவரது (மணி சங்கர் அய்யர்) கருத்து வருந்தத்தக்கது,” என்று அமித் ஷா கூறினார்.
மூன்றாவது முறையாக பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனைத்து இடஒதுக்கீடுகளையும் நீக்கிவிடும் என்ற குற்றச்சாட்டுகளை நிராகரித்த அமித் ஷா, தெலங்கானாவில் மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை மட்டுமே அகற்ற விரும்புகிறது என்று கூறினார்.
தெலங்கானாவில் முதல்வர் ஏ ரேவந்த் ரெட்டியின் அரசு ஸ்டீயரிங் வீலை ஓவைசிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அமித் ஷா குற்றம் சாட்டினார். “அவர்கள் சமாதான அரசியலில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் சி.ஏ.ஏ.,வை எதிர்க்கிறார்கள் மற்றும் ரோஹிங்கியாக்களை நாட்டிற்குள் வர அனுமதிக்க விரும்புகிறார்கள்,” என்று அமித் ஷா கூறினார்.
எதிர்க்கட்சிகளைப் பற்றி பேசிய அமித் ஷா, “இந்த மக்களின் சிறுபான்மை வாக்கு வங்கியைப் பாதுகாக்கும் பேராசை மிகவும் வலுவானது, அவர்கள் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கைக் கூட கேள்வி கேட்கிறார்கள். அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்குப் பிறகு, யாரேனும் ஒருவர் தனது பாதுகாப்புப் படைகளை சேதப்படுத்தினால், எதிரியின் எல்லைக்குள் சென்று தாக்கும் ஒரே நாடு இந்தியா. இதை ரேவந்த் ரெட்டி தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொள்ளலாம் ஆனால் வெளிப்படையான காரணங்களுக்காக அதை பகிரங்கமாக சொல்ல முடியாது,” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“