பிரபல மலையாள திரைப்பட நடிகை பாவனா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, நடிகர் திலீப்பிடம் புதன்கிழமை 13 மணிநேரம் கேரள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி தன்னுடைய காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும், அதுதொடர்பான புகைப்படங்களையும் கடத்தல்காரர்கள் எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சுனில் உள்ளிட்ட சிலர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவரான விஷ்ணு என்பவர், நடிகர் திலீப்பை இந்த வழக்கில் சிக்க வைக்காமல் இருக்க சுமார் 1.5 கோடி ரூபாய் கேட்டதாக காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக, புதன் கிழமை மதியம் 12 மணியளவில் நடிகர் திலீப் மற்றும் இயக்குநர் நதிர்ஷா ஆகியோர், ஆலுவா காவல் நிலையத்தில் விசாரணைக்காக வந்தனர். சுமார் 13 மணிநேர விசாரணைக்கு பின் அதிகாலை 1:30 மணியளவில் அவர்கள் விடப்பட்டனர். இதனிடையே 15 நிமிட தேநீர் இடைவேளை மற்றும் இரவு உணவு இடைவேளை மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிகிறது.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய திலீப், இதுபோன்ற வழக்குகளில் சிக்க வைத்து தன் புகழையும், நற்பெயரையும் கெடுக்க சிலர் முயற்சிப்பதாக தெரிவித்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக சிலர் தன்னை மிரட்டுவதாக வழக்குப்பதிவு செய்ததாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.