கேரளாவில் உள்ள தலைமை கோயில் அமைப்பான திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டால் (டி.டி.பி) நிர்வகிக்கப்படும் கோயில் வரலாற்றில் முதல்முறையாக, பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் விரைவில் ஒரு கோவிலில் அர்ச்சகராக நியமனம் செய்யப்படுகிறார்.
கேரளாவின் தலைமை கோயில் அமைப்பான திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டால் நிர்வகிக்கப்படும் இந்து கோயில்களில் இதுவரை உயர் சாதியினர் மட்டுமே அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டு வந்த நிலையில், அதில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக ஒரு நடவடிக்கை மேற்கொண்டது. கேரளாவில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு 1,200 கோயில்களை நிர்வகித்து வருகிரது. அதில், 19 பிராமணர் அல்லாத தாழ்த்தப்பட்ட சாதிகளை அர்ச்சகர்களாக நியமனம் செய்ய முடிவு செய்தது. அவர்களில் 18 பேர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்கள். ஒருவர் பட்டியல் பழங்குடியைச் சேர்ந்தவர். இவர்கள் அனைவரும் கோயிலில் பகுதி நேர அர்ச்சகர்கள் என்ற அடிப்படையில் நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
கேரளாவின் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு என்பது ஒரு தன்னாட்சி கோயில் அமைப்பாகும். இது சபரிமலை சுவாமி அய்யப்பன் கோயில் உட்பட பல புகழ்பெற்ற கோயில்களை நிர்வகிக்கிறது.
“திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் கீழ் உள்ள கோயில்களில் ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்தவரை அர்ச்சகராக நியமிப்பது இதுவே முதல் முறை” என்று மாநில தேவஸ்வம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
பகுதிநேர அர்ச்சகர்கள் பதவிகளில் சிறப்பு ஆட்சேர்ப்பு மூலம் தாழ்த்தப்பட்டவர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்று அமைச்சர் தெரித்துள்ளார்.
2017ம் ஆண்டில் வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் இருந்து திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டில் பகுதிநேர அர்ச்சகர் பதவிக்கு இதுவரை 310 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
மேலும் அவர், அந்த நேரத்தில் அர்ச்சகர் தேர்வுக்கு பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினரிடமிருந்து போதுமான தகுதி வாய்ந்த நபர்கள் இல்லாததால், அவர்களுக்கான சிறப்பு அறிவிப்பின்படி தனி தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டது. அது நவம்பர் 5ம் தேதி வெளியிடப்பட்டது என்று அமைச்சர் கூறினார்.
அர்ச்சகர் பணிக்கு எஸ்.டி சமூகத்திற்கு நான்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், ஒரே ஒரு விண்ணப்பம் மட்டுமே பெறப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இடது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், ஆட்சேர்ப்பு வாரியம் மறுசீரமைக்கப்பட்டது. திருவிதாங்கூர், கொச்சின் மற்றும் மலபார் தேவஸ்வம் வாரியங்களில் பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 815 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்தார்.
கேரள அரசு கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் தென் மாநிலத்தின் பல்வேறு கோயில்களில் மொத்தம் 133 பிராமணரல்லாத அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"