கேரள சட்டசபை புதன்கிழமை ஒருமனதாக அரசியலமைப்பு மற்றும் அனைத்து அதிகாரப்பூர்வ பதிவுகளிலும் மாநிலத்தை "கேரளம்" என மறுபெயரிட மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்றியது.
முதலமைச்சர் பினராயி விஜயன் கொண்டு வந்த இந்தத் தீர்மானம், எந்தத் திருத்தமும் இல்லாமல் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் தீர்மானத்தில் எந்த மாற்றத்தையும் பரிந்துரைக்கவில்லை.
தீர்மானத்தில் விஜயன், “மலையாள மொழியில் நமது மாநிலத்தின் பெயர் கேரளம். நவம்பர் 1, 1956 அன்று மொழி அடிப்படையில் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
அந்த நாள் கேரளா உருவான நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது. மலையாளம் பேசும் அனைத்து சமூகத்தினருக்கும் ஒன்றுபட்ட கேரளா என்ற கோரிக்கை சுதந்திரப் போராட்ட நாட்களில் இருந்தே வலுவாக எழுப்பப்பட்டு வருகிறது.
ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் அட்டவணையில் நமது மாநிலத்தின் பெயர் கேரளா என்று எழுதப்பட்டுள்ளது.
மேலும், “மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்றுவதற்கு அரசியலமைப்பின் 3ஆவது பிரிவின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை இந்த பேரவை ஒருமனதாக கேட்டுக்கொள்கிறது.
அரசியலமைப்பின் 8-ஆவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் மாநிலத்தின் பெயரை கேரளம் என்று மாற்ற வேண்டும் என்றும் சட்டசபை கேட்டுக்கொள்கிறது” என முதலமைச்சர் பினராய் விஜயன் கூறினார்.
உண்மையில், கேரளா வாசிகள் ஏற்கனவே மாநிலத்தை கேரளம் என்று அழைக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் கேரளம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“