Kerala Bar Council gets its first transgender advocate Tamil News: கேரள மாநில பார் கவுன்சிலில் முதல் திருநங்கை வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டுள்ளார் பத்ம லட்சுமி என்ற திருநங்கை. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அம்மாநில பார் கவுன்சிலில் பதிவு செய்து கொண்ட 1500 பேரில் மாற்றுத்திறனாளி பெண்ணும் வழக்கறிஞருமான பத்ம லட்சுமியும் ஒருவர். அவருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பத்ம லட்சுமிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு வாழ்த்து கூறியுள்ள கேரள சட்ட துறை அமைச்சர் பி ராஜீவ், அவர் மற்றவர்களுக்கும் உத்வேகமாக இருப்பார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“வாழ்க்கையில் அனைத்து கஷ்டங்களையும் கடந்து கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக பதிவு செய்த பத்ம லட்சுமிக்கு வாழ்த்துக்கள். நாம் பின்னுக்குத் தள்ளப்படுவதை உறுதிப்படுத்த பலர் இருப்பார்கள். இதையெல்லாம் தாண்டி பத்ம லட்சுமி சட்ட வரலாற்றில் தன் பெயரையே எழுதிக் கொண்டுள்ளார்” என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பத்ம லட்சுமி, கொச்சியில் உள்ள எடப்பள்ளியில் வசித்து வருகிறார். அவர் எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பாரபட்சம் மற்றும் அநீதியை எதிர்கொள்பவர்களின் குரலாக இருப்பதே தனது நோக்கமாக உள்ளது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இந்தியாவில் கடந்த 2017-ல் மேற்கு வங்க மாநிலத்தில் ஜோயிதா மோண்டல் என்ற முதல் திருநங்கை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2018-ல் மகாராஷ்டிராவின் நாக்பூரில் வித்யா காம்ப்ளே மற்றும் கவுகாத்தியைச் சேர்ந்த ஸ்வாதி பிதான் பருவா என்ற திருநங்கையும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பித்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil