கேரள மாநில பா.ஜ.க தலைவர் கே. சுரேந்திரன் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) திருச்சூரில் கட்சி நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியில் அக்கட்சியின் பெண் தலைவர்கள் பூதகி (புராண இதிகாசத்தில் கண்ணனை கொல்லவரும் அரக்கி) போல் பருத்து விட்டனர்” எனப் பொருள்பட பேசியதாக புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில் கேரள இளைஞர் அணி மகளிர் காங்கிரஸ் தலைவி வீணா எஸ் நாயர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரில் பெண்களை இழிவுப்படுத்திய சுரேந்திரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மகளிர் அணித் தலைவி சி.எஸ் சுஜாதா என்பவர் திருவனந்தபுரம் சிட்டி போலீசில் சுரேந்திரன் மீது புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் சுரேந்திரன் மீது இ.பி.கோ 354ஏ (பெண்களின் நிறத்தை ஆபாசமாக வர்ணித்தல்) 509 (பெண்களுக்கு எதிராக கண்ணியக்குறைவான வார்த்தையை உபயோகித்தல்) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் எதிர்க்கட்சித் தலைவர் (காங்கிரஸ்) வி.டி. சதீஷன், “பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் தனது மோசமான கருத்துகளுக்காக மன்னிப்பு கோர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“