கேரளாவை தளமாகக் கொண்ட எண்ணிக்கை அடிப்படையில் வலுவான கத்தோலிக்க திருச்சபையான சீரோ- மலபார் திருச்சபை, தேவாலயத்தில் திருமணங்கள் நிச்சயிக்கப்படுவதற்கு முன்பு திருமணத்தைப் பதிவு செய்ய அனுமதிக்க முடிவு செய்துள்ளது.
வெளிநாட்டில் பணிபுரியும் கணவர்/மனைவி உடன் செல்ல விசா விண்ணப்பிக்க நடைமுறைக்கு திருமணச் சான்றிதழ் தேவைப்படுவதால் சர்ச் உறுப்பினர்கள் பலரும் இந்த கோரிக்கையை நீண்ட நாட்களாக எழுப்பி வந்தனர். இந்நிலையில் பழைய நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்க திருச்சபை அனுமதி அளிக்கிறது.
எனினும் தம்பதியினர் தங்கள் திருமணம் தேவாலய சடங்கு நடத்தப்படுவதற்கு முன்பு ஒன்றாக வாழக்கூடாது. மேலும் திருமண விழாவை முடிந்த வரை சீக்கிரம் செய்யப்பட வேண்டும் என்று கூறியது.
இதற்கான உத்தரவை சீரோ மலபார் திருச்சபையின் மேஜர் பேராயர் கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி கடந்த மாதம் பிறப்பித்தார். வெளிநாடுகளுக்கு குடும்ப விசா பெறுவது போன்ற காரணங்களுக்காக, திருச்சபை உறுப்பினர்கள் தங்கள் உள்ளூர் சர்ச் தலைமையை அணுகி திருமணத்தை சிவில் பதிவு செய்து அனுமதி பெறலாம் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
"அனுமதிக்காக உள்ளூர் தேவாயலத்தை அணுகும் போது விண்ணப்பத்தை எழுத்துப்பூர்வ கோரிக்கையாக முன்வைக்க வேண்டும். அதில், திருமணத்திற்கு முன் ஒன்றாக வாழ மாட்டோம்.
புனிதமான திருமணத்திற்கு முன் இணைந்து வாழ்வதன் பாவத்தை உணர்வோம். முடிந்த வரை திருமண விழாவை சீக்கிரம் செய்வோம் என்று உறுதியளிக்க வேண்டும்” என்று எழுத்துப்பூர்வ கடிதம் வழங்க வேண்டும்.
2007 ஆம் ஆண்டு, உச்ச நீதிமன்றம் மத வேறுபாடின்றி திருமணத்தை சிவில் பதிவு செய்வது கட்டாயமாக்கியது. சிவில் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவதற்கு முன்பு கிறிஸ்துவ சமூகத்தினர் முதலில் ஒரு தேவாலயத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தேவாலயங்கள் உத்தரவிட்டது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/cities/thiruvananthapuram/kerala-catholic-church-oks-marriage-registration-before-church-ceremony-8989774/
சீரோ மலபார் திருச்சபையின் ஆர்க்கிபிஸ்கோபல் அதிபர் அருட்தந்தை ஆபிரகாம் கவில்புரயிடத்தில் கூறுகையில், “இந்த புதிய மாற்றம் வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு உதவும். அவர்கள் குடும்ப விசாவுக்கு விண்ணப்பிக்க உதவும். பலர் குறைந்த நாட்கள் விடுப்பு எடுத்து வருகிறார்கள். தேவாலயத்தில் திருமணத்திற்குப் பிறகு சிவில் பதிவு செய்ய அவர்களுக்கு நேரம் இல்லை என்று கூறுகிறார்கள். இதனால் தற்போது இந்த புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“