"எனது நிறம் நன்றாக இல்லை என்று சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக என்னிடம் கூறுகின்றனர்" என்று கேரள தலைமை செயலாளர் சாரதா முரளீதரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நிறப்பாகுபாடு குறித்து வாழ்நாள் முழுவதும் தான் சந்தித்த அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘I need to own my blackness’: Kerala chief secretary on insult to her complexion
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கேரளாவின் தலைமைச் செயலாளராக சாரதா பொறுப்பேற்றார். இந்த சூழலில் நிறப்பாகுபாடு குறித்து தான் எதிர் கொண்ட சம்பவத்தை அவர் முகநூலில் குறிப்பிட்டுள்ளார். "தலைமைச் செயலாளராக எனது பதவிக் காலம் இருள் சூழ்ந்து இருப்பதாகவும், எனது கணவர் இந்தப் பதவி வகித்த போது, அது வென்மையாக இருந்ததாகவும் ஒரு கருத்தை நான் கேட்டேன்" என சாரதா தெரிவித்துள்ளார்.
சாரதாவின் கணவரான வி. வேணு, கடந்த ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து, சாரதா அந்தப் பொறுப்பை ஏற்றார்.
"என் கருமை நிறத்தை நான் உடைமையாக்கிக் கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்ட பதிவை சாரதா முதலில் நீக்கி விட்டார். பின்னர் அதற்கு விளக்கும் அளிக்கும் விதமாக மற்றொரு பதிவை அவர் வெளியிட்டார். "சில சலசலப்பான பதில்களால் நான் குழப்பம் அடைந்தேன். இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று என் நலம் விரும்பிகள் கூறினர். அவர்களுடன் உடன்படுவதன் காரணத்தினால், மீண்டும் இதனை பதிவிடுகிறேன்
இந்த ஒரு சம்பவத்தை மட்டும் நான் ஏன் தனியாக குறிப்பிட வேண்டும்? ஆம், நான் காயப்பட்டேன். இதற்கு முன்னர் இதே பதவியில் என் கணவர் இருந்ததை தொடர்ந்து, கடந்த 7 மாதங்களாக பல ஒப்பீடுகளை நான் கண்டுள்ளேன். நான் மிகவும் மனச்சோர்வடைந்தேன். நான் கருப்பான பெண் என்று முத்திரை குத்தப்பட்டேன். கருப்பாக இருப்பது அவமானம் என்ற அளவில் கூறுகின்றனர்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "கருப்பு நிறத்தை ஏன் இழிவுபடுத்தப்பட வேண்டும்? கருப்பு என்பது பிரபஞ்சத்தின் எல்லாவற்றிலும் பரவியிருக்கும் உண்மை. கருப்பு என்பது எதையும் உறிந்து கொள்ளும் தன்மை கொண்டது. மனித குலம் உணர்ந்த சக்தியின் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக கருப்பு இருக்கிறது. கருப்பு வண்ணம் எல்லோருக்கும் பொருத்தமாக இருக்கும். ஆடை முதல் கண்மை என பலவற்றில் கருப்பு நிறம் இருக்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமின்றி, "நான்கு வயது குழந்தையாக இருந்தபோது, என்னை மீண்டும் வயிற்றில் வைத்து, வெள்ளை நிறத்துடன் அழகாக மாற்றி மீண்டும் என்னை வெளியே கொண்டு வர முடியுமா என்று என் தாயாரிடம் நான் கேட்டேன். கருப்பு என்பது நல்ல நிறம் இல்லை என்று கட்டமைக்கப்பட்ட பிம்பத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நான் புதைந்து விட்டேன்.
இந்த நிலை என் குழந்தைகள் பிறந்த பின்னர் மாறியது. கருப்பு நிறத்தில் மகிழ்ச்சியாகவும், அழகாகவும் இருப்பதாக என் குழந்தைகள் கூறினர். மற்றவர்களால் உணர முடியாத அழகை, என் குழந்தைகள் அறிந்து கொண்டனர். கருப்பு மிகவும் அழகாக இருக்கிறது என்பதை என் குழந்தைகள் எனக்கு உணர்த்தினார்கள்" என தனது முகநூல் பதிவில் சாரதா தெரிவித்துள்ளார்.
இந்த பதிவுக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான வி.டி. சதீசன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். "அன்புள்ள சாரதா முரளீதரன், நீங்கள் எழுதிய ஒவ்வொரு வார்த்தையும் மனதைத் தொடுகிறது. விவாதிப்பதற்கு தகுதியான கருப்பொருளாக இது மாறி இருக்கிறது. என் தாயாரும் கருமை நிறம் தான்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சாரதா முரளீதரன் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றார். 1956-ம் ஆண்டு மாநிலம் உருவான பிறகு, ஐ.ஏ.எஸ் தம்பதியினர் இடைவிடாமல் அடுத்தடுத்து தலைமைச் செயலாளர்களாக பதவி வகிப்பது இதுவே முதல் முறையாகும். வேணு மற்றும் சாரதா இருவரும் 1990 ஐ.ஏ.எஸ் பேட்ச்சை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- Shaju Philip