காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி சனிக்கிழமை கூறுகையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் பழம்பெரும் கட்சியான காங்கிரஸையும் ராகுல் காந்தியையும் மட்டுமே தாக்குகிறார் ஆனால் பா.ஜ.க.,வை அல்ல என்றும் முதல்வர் “சமரசம்” செய்துக் கொண்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: Kerala CM compromised, attacks only Rahul Gandhi, Congress: Priyanka Gandhi
லைஃப் மிஷன், ராஜதந்திர பைகள் மூலம் தங்கம் கடத்தல் உள்ளிட்ட பல ஊழல்களில் பினராயி விஜயனின் பெயர் வந்துள்ளது, ஆனால் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு அவர் மீது எந்த வழக்கையும் எடுக்கவில்லை, மேலும் அவருக்கு எதிராக சோதனை அல்லது எந்த வகையான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கூறினார்.
“கால்பந்து போட்டியைப் போல, சமரசம் செய்த வீரருடன் நீங்கள் வெற்றி பெற முடியாது, அதே போல் சமரசம் செய்து கொண்டவர் முதல்வர். அவர் எனது சகோதரர் (ராகுல் காந்தி) மற்றும் காங்கிரஸ் கட்சியை மட்டுமே தாக்குகிறார். அவர் பா.ஜ.க.,வை தாக்கவில்லை,” என்று பிரியங்கா காந்தி கூறினார்.
"நீங்கள் அதைப் பற்றி யோசித்தீர்களா? லைஃப் மிஷன், தங்கக் கடத்தல், பல ஊழல்களில் அவரது பெயர் வந்தது, ஆனால் பா.ஜ.க அரசு அவர் மீது வழக்குப் போடவில்லை, அவர் மீது சோதனை நடத்தவில்லை, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது எப்படி? பிரியங்கா காந்தி கூறினார்.
பத்தனம்திட்டா லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆண்டனிக்கு ஓட்டு கேட்கும் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி இவ்வாறு பேசினார். டி.எல்.எஃப்-ராபர்ட் வத்ரா தொடர்பைத் தூண்டிவிட்டு, ராபர்ட் வத்ராவின் மனைவியான பிரியங்கா காந்தியை பினராயி விஜயன் விமர்சித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த கருத்துக்கள் வந்தது. பிரியங்கா காந்தியைக் குறிவைத்து, டி.எல்.எஃப் தனியார் நிறுவனத்தில் சி.பி.ஐ சோதனை நடத்தியதை கேரள முதல்வர் பினராயி விஜயன் குறிப்பிட்டார்.
டி.எல்.எஃப் நிறுவனத்துக்கும் ராபர்ட் வத்ராவுக்கும் இடையே நிலம் கொடுக்கல் வாங்கல் புகார்கள் இருப்பதாக பினராயி விஜயன் கூறினார். சோதனைக்குப் பிறகு நிறுவனம் ரூ.170 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கியதாக பினராயி விஜயன் கூறினார்.
“நிறுவனத்தின் பரிவர்த்தனைகளில் சட்டவிரோதம் எதுவும் இல்லை என்று அதே பா.ஜ.க அரசு பின்னர் நீதிமன்றத்தில் கூறியது. தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க.வுக்கு பணம் கொடுத்தவுடன் ரெய்டு மற்றும் வழக்கு முடிவுக்கு வந்தது,” என்று பினராயி விஜயன் கூறினார்.
பிரியங்கா காந்தி, கேரளாவில் உள்ள சி.பி.ஐ(எம்) தலைமையிலான இடதுசாரி அரசாங்கத்தையும் தாக்கினார், வேலை வாய்ப்புகள் இல்லாததால் கேரளாவை விட்டு மக்கள் பிற மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் செல்வதாக பிரியங்கா குற்றம் சாட்டினார்.
கேரள அரசு தனது கட்சித் தொண்டர்களுக்கு மட்டுமே வேலை வழங்குவதாகவும், சாதாரண மக்களைப் புறக்கணிப்பதாகவும் பிரியங்கா குற்றம் சாட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“