Kerala CM-link in smuggling case: Swapna made no such claim before NIA : கேரளத்தில் தங்க கடத்தல் விவகாரத்தில், ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயனுக்காக, தங்கம் கடத்தினார் என்ற குற்றச்சாட்டை சுங்கத்துறையினர் முன்வைத்தனர். ஆனால் இந்த வழக்கை, சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் பதிவு செய்து விசாரணை செய்து வரும் தேசிய விசாரணை முகமை, இந்த குற்றச்சாட்டிற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர். தங்க கடத்தல் விவகாரத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்வப்னாவை என்.ஐ.ஏ கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். “எங்களுடைய விசாரணையின் போது, அப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் எதையும் ஸ்வப்னா முன்வைக்கவில்லை. இருப்பினும், மற்ற முகமையின் விசாரணையில் நாங்கள் எந்த விதமான கருத்தினையும் கூற முடியாது” என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஜனவரி மாதம் இந்த வழக்கிற்கான குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது என்.ஐ.ஏ. அதிலும், முதல்வரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கவில்லை. ஸ்வப்னாவுடன் இருக்கும் தொடர்பு காரணமாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இறுதியில் அமலாக்கத்துறையினர் அவரை கைதும் செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு இருக்கும் தொடர்பு குறித்து என்.ஐ.ஏ அவரிடம் செப்டம்பர் மாதம் விசாரணை மேற்கொண்டது. ஒரு மாதம் கழித்து, அமலாக்கத்துறை பண மோசடி வழக்கில் கைது செய்தது. முதல்வர் அலுவலகத்தில் சிவசங்கரன் பணியாற்றிய போது அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு அரசு நலத்திட்டங்கள் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வந்தது. ஆனாலும் என்.ஐ.ஏ, இந்த வழக்கில் சிவசங்கருக்கு எதிராக எந்த விதமான ஆதாரங்களும் இல்லாததால் அவரை கைது செய்யவோ அவர் மீது குற்றம் சுமத்தவோ இல்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
"என்ஐஏ விசாரணையில் இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர், 2019 ஜூன் முதல் சதித்திட்டம் தீட்டியது, நிதி திரட்டியது, நவம்பர் 2019 மற்றும் 2020 ஜூன் மாதங்களுக்கு இடையில் 167 கிலோ மதிப்பிலான தங்கத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கடத்தியது போன்ற குற்றங்களில் அவர் ஈடுபட்டுள்ளார் என்று என்.ஐ.ஏ அறிவித்துள்ளது. மேலும் கடத்தப்பட்ட தங்கத்தினை இறக்குமதி செய்ய திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரசு எமிரேட்ஸ் ஜெனரல் தூதரகத்தின் முகவரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்கள் பஹ்ரைன், சவுதி அரேபியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலிருந்து அதிகமான தங்கத்தை கடத்த திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது என்று ஸ்வப்னா மற்றும் 19 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் என்ஐஏ அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் சரித் பி.எஸ்., ஸ்வப்னா சுரேஷ், மற்றும் சந்தீப் நாயர் போன்றவர்களை கைது செய்தது. பின்னர் இந்த வழக்கு தொடர்பாக அமீரகத்திற்கு பயணம் மேற்கொண்டது என்.ஐ.ஏ. இந்த வழக்கில் இதுவரை 21 நபர்களை கைது செய்துள்ளது என்.ஐ.ஏ என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.